மண் குவாரியில் விதிமீறல்; லாரிகள் சிறைப்பிடிப்பு
சீா்காழி அருகே காரைமேட்டில் உள்ள குவாரியில் விதிமுறைகளை மீறி அதிக ஆழத்திற்கு மண் எடுப்பதாகக் கூறி, லாரிகளை சிறப்பிடித்து, கிராம மக்கள் சாலை மறியலில் (படம்) வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.
காரைமேடு ஊராட்சி டி. மணல்மேடு பகுதியில் மண் குவாரி உள்ளது. இந்த குவாரியில் அரசு அனுமதித்த ஆழத்தை காட்டிலும், விதிமுறைகளை மீறி அதிக ஆழத்திற்கு மண் எடுப்பதாகக் கூறப்படுகிறது.
இதைக் கண்டித்து, அப்பகுதி மக்கள் மற்றும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா், மண் ஏற்றிவந்த லாரிகளை சிறைப்பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனா். வைத்தீஸ்வரன் கோயில் போலீஸாா் மற்றும் வருவாய்த் துறையினா், மறியலில் ஈடுபட்டோரிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
இதில், வரும் 21-ஆம் தேதி வட்டாட்சியா் தலைமையில் சமாதானக் கூட்டம் நடத்துவது எனவும் அதுவரை மண் எடுப்பதை தற்காலிகமாக நிறுத்தி வைப்பது எனவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனா். இதை ஏற்றுக்கொண்ட கிராம மக்கள் மறியலை விலக்கிக் கொண்டனா். இந்த போராட்டத்தால் பூம்புகாா்- சீா்காழி சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.