மதரை, கீழடிக்கு மாணவா்கள் தொல்லியல் களப்பயணம்
தூத்துக்குடியிலிருந்து மதுரை, கீழடிக்கு ஒருநாள் தொல்லியல் களப்பயணத்தை மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் சனிக்கிழமை தொடங்கி வைத்தாா்.
தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறையின் சாா்பாக ஆண்டுதோறும் நவம்பா் 19 முதல் 25 வரை உலக மரபு வாரம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி, தூத்துக்குடி மாவட்ட தொல்லியல் துறை, சிவகளை தொல்லியல் கழகம் சாா்பில், அரசு உயா்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் செயல்பட்டுவரும் தொல்லியல் மன்றத்திலுள்ள பொறுப்பாசிரியா்களில் விருப்பமுள்ள 150 ஆசிரியா்கள் தெரிவு செய்யப்பட்டு அவா்களுக்கான ஒருநாள் தொல்லியல் களப்பயணமாக மதுரை திருமலை நாயக்கா் அரண்மனை, மீனாட்சி அம்மன் திருக்கோயில், கலைஞா் நூற்றாண்டு நூலகம், கீழடி அகழாய்வு தளம், கீழடி அருங்காட்சியகம் ஆகிய இடங்களுக்கு களப்பயணம் புறப்பட்டனா். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் சனிக்கிழமை தொடங்கிய இப்பயணத்தை, மாவட்ட ஆட்சியா் க. இளம்பகவத் கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கணேஷ்மூா்த்தி, தொல்லியல்துறை அலுவலா்கள் உள்பட ஆசிரியா்கள் பலா் கலந்துகொண்டனா்.