அரசு திட்டங்களின் வெற்றிக் கதைகள் பற்றிய எண்ம புத்தகங்களை பிரதமா் இன்று வெளியிடு...
மதிமுக நிர்வாகக் குழுவில் 9 தீர்மானங்கள் நிறைவேற்றம்!
மதிமுக நிர்வாகக் குழுவில் 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகக் குழுக் கூட்டம், அவைத் தலைவர் அர்ஜுனராஜ் தலைமையில் இன்று(ஏப். 20) சென்னை, எழும்பூரில் உள்ள தலைமை அலுவலகம் தாயகத்தில் நடைபெற்றது.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எம்.பி., சிறப்புரை ஆற்றினார்.
பொருளாளர் மு.செந்திலதிபன், முதன்மைச் செயலாளர் துரை வைகோ எம்.பி., துணைப் பொதுச்செயலாளர்கள் மல்லை சத்யா, செஞ்சி ஏ.கே.மணி, ஆடுதுறை ரா.முருகன், தி.மு. ராசேந்திரன், டாக்டர் ரொஹையா மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
தீர்மானம் -1: இந்தியாவிலேயே தலைசிறந்த மாநிலமாக திகழும் தமிழ்நாட்டின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கு ஆளுமைத் திறனோடு வழிநடத்தும் திராவிட மாடல் அரசின் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்வதுடன் 2026 சட்டப்பேரவைத் தேர்தலிலும் திமுக தலைமையிலான கூட்டணி மாபெரும் வெற்றி பெற்று நல்லாட்சி தொடர வேண்டுமென்று மதிமுக நிர்வாகக் குழு விழைகிறது.
தீர்மானம் -2: இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்கள் செல்ல வேண்டிய திசை வழியை தீர்மானிக்கக் கூடிய வகையில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் மாநில சுய ஆட்சிக் கோட்பாட்டின் அவசிய தேவையை வலியுறுத்தி உரையாற்றி உயர்நிலைக் குழுவையும் அமைத்த முதல்வர் ஸ்டாலினுக்கு மதிமுக நிர்வாகக் குழு பாராட்டுகளையும் நன்றியையும் உரித்தாக்குகிறது.
தீர்மானம் -3: ஆளுநர் பதவியில் நீடிக்கும் தார்மிக தகுதியை ஆர்.என். ரவி இழந்துவிட்டார். எனவே அவரை குடியரசுத் தலைவர் தமிழ்நாடு ஆளுநர் பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று மதிமுக நிர்வாகக் குழு கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம் -4: வக்ஃபு சட்டத்திருத்தத்தை எதிர்த்து ஜனநாயக வழியில் போராடி முறியடிக்க வேண்டும் என்று மதிமுக நிர்வாகக் குழு அனைத்து மதச்சார்பற்ற ஜனநாயக முற்போக்கு சக்திகளையும் கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம் 5: நாள்தோறும் தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்படுவதும், தாக்கப்படுவதும் குறித்து இந்தியப் பிரதமர் இலங்கை அதிபரிடம் கண்டனத்தை பதிவு செய்யாததை இக்கூட்டம் கண்டிக்கிறது.
தீர்மானம் 6: பொதுமக்களிடமிருந்து தமிழில் வருகின்ற கடிதங்களுக்குத் தமிழிலேயே பதில் அளிக்க வேண்டும். அரசுப் பணியாளர்கள் அனைத்து இனங்களிலும் தமிழில் மட்டுமே கையொப்பமிட வேண்டும் என்று அரசு ஆணையில் தெரிவிக்கப்பட்டுள்ளதை மதிமுக நிர்வாகக் குழு வரவேற்று, இதனைத் தீவிரமாக நடைமுறைப்படுத்தவும் வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறது.
தீர்மானம் -7: தமிழ்நாட்டில் ஜாட் திரைப்படத்திற்குத் தடை விதிக்க வேண்டும் என்று இக்கூட்டம் வலியுறுத்துகிறது.
தீர்மானம் -8: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் 32 ஆவது ஆண்டு தொடக்க விழாவை மே 6ஆம் தேதியிலிருந்து தொடர்ந்து இரண்டு வார காலத்திற்கு கட்சித் தோழர்களின் இல்லங்களில் கொடியேற்றுவது, பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்குவது, ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை நல்குதல், ஆதரவற்றோர் இல்லங்களில் உணவு அளித்தல் மற்றும் தெருமுனைக் கூட்டங்கள், பொதுக்கூட்டங்கள் நடத்தி தமிழ்நாடு முழுவதும் சிறப்பாகக் கொண்டாடுவது என்று கட்சி நிர்வாகக் குழு தீர்மானிக்கிறது.
தீர்மானம் -9: தமிழ்நாடு ஆளுநரை உச்சநீதிமன்றம் மிகக் கடுமையாக கண்டித்திருக்கின்ற நிலையில், அவர் ஆளுநர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட வேண்டும்.
இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டத்தை அவமதிக்கும் வகையிலும், மதச்சார்பின்மை, நாட்டின் பன்முகத்தன்மையைச் சீர்குலைக்கும் வகையிலும் கடந்த பத்தாண்டு கால பா.ஜ.க. ஆட்சி தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது நாடாளுமன்றத்தில் வக்ஃப் சட்டத் திருத்தத்தை நிறைவேற்றி சிறுபான்மை மக்களை அச்சுறுத்தி வருகிறது. இச்சட்டத்தை திரும்பப் பெற வேண்டும்.
இக்கோரிக்கைகளை வலியுறுத்தி மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் ஏப்ரல் 26 ஆம் தேதி காலை 10 மணிக்கு சென்னை, திருச்சி, மதுரை, கோவை ஆகிய இடங்களில் மண்டல வாரியாக ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: விசைத்தறி நெசவாளர்கள் தொடர் உண்ணாவிரதம்: அதிமுக ஆதரவு