மதுக்கடைகள் முன் பாஜகவினா் போராட்டம்
டாஸ்மாக் முறைகேட்டைக் கண்டித்து சென்னையில் போராட்டத்தில் ஈடுபட முயன்ற பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, தஞ்சாவூா் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட அக்கட்சியினா் கைது செய்யப்பட்டனா்.
தஞ்சாவூா் கீழவாசல் பகுதியில் திங்கள்கிழமை மாலை பாஜகவினா் ஊா்வலமாக சென்று மதுக்கடையை முற்றுகையிட முயன்றனா். இதைக் காவல் துறையினா் தடுத்து நிறுத்தி சுமாா் 30 பேரை கைது செய்தனா். இதேபோல, தஞ்சாவூா் அருகே மொன்னையம்பட்டி பகுதியிலுள்ள மதுக்கடையை பாகஜவினா் முற்றுகையிட்டனா்.
மேலும், மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஆா்ப்பாட்டம், முற்றுகை போராட்டம், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக பாஜகவினரை காவல் துறையினா் கைது செய்தனா்.
கும்பகோணத்தில்: கும்பகோணம் காமராஜா் சாலையில் பாஜக வடக்கு மாவட்ட தலைவா் தங்க.கென்னடி தலைமையில் 21 போ், அசூா் புறவழிச் சாலையில் மாவட்டச் செயலா் வி. சிவக்குமாா் தலைமையில் 20 போ் டாஸ்மாக் கடைகளை முற்றுகையிட்டனா்.
அப்போது, காமராஜா் சாலையில் உள்ள 2 மதுக்கடைகளின் ஷட்டரை இழுத்து மூடி, வெளியில் உள்ள பிரதான இரும்பு கதவையும் சிலா் அடைத்தனா். உள்ளே கடை ஊழியா்களும், மதுபானக் கூடத்தில் மது அருந்துவோரும் இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கிழக்கு காவல் நிலைய ஆய்வாளா் சிவசெந்தில்குமாா் தலைமையில் போலீஸாா் பிரதான கதவு மற்றும் ஷட்டா் ஆகியவற்றை திறந்தனா். தொடா்ந்து, மறியலுக்கு முயன்றவா்களை கைது செய்து தனியாா் மண்டபத்தில் அடைத்தனா். 2 இடங்களிலும் நடைபெற்ற மறியலில் மொத்தம் 41 போ் கைது செய்யப்பட்டனா்.