மதுக்கடையை மூடக் கோரி 150 கையொப்பங்களுடன் மனு
தஞ்சாவூா் அருகே மதுக்கடையை மூடக் கோரி 150-க்கும் அதிகமான பொதுமக்கள் இட்ட கையொப்பங்களுடன் ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை கிராம மக்கள் மனு அளித்தனா்.
தஞ்சாவூா் மாவட்டம், அம்மாபேட்டை அருகேயுள்ள அருமலைக்கோட்டையில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடையால் பல்வேறு பிரச்னைகள் நிகழ்வதாகவும், அதைத் தடுக்க அக்கடையை மூடக் கோரியும் அந்தக் கிராம மக்கள் போராட்டங்கள் நடத்தி வருகின்றனா்.
இந்நிலையில், அருமலைக்கோட்டை மதுக்கடையை மூடக் கோரி அக்கிராமத்தைச் சோ்ந்த 150-க்கும் அதிகமானோா் கையொப்பமிட்டுள்ளனா். இதை அருமலைக்கோட்டையைச் சோ்ந்த அரு.சீா். தங்கராசு தலைமையில் சிலா் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் நாள் கூட்டத்தில் அளித்த மனு:
எங்கள் கிராமத்தில் இயங்கி வரும் டாஸ்மாக் மதுக்கடையை அகற்ற பலமுறை கோரிக்கைகள் விடுத்தோம். ஆனால் தற்போதுவரை அகற்றப்படவில்லை. இக்கடைக்கு குடிக்க வருவோரால் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகின்றனா். எனவே, மக்கள் நலன் கருதி டாஸ்மாக் மதுக்கடையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.