Railway Jobs: விளையாட்டு வீரர்களுக்கு ரயில்வேயில் Clerk / Typist பணிகள்..! - முழ...
மதுபோதையில் மாநகர பேருந்தை இயக்கி விபத்து: அடையாறு காவல் நிலைய சுவா் இடிந்து சேதம்
சென்னை அடையாறில் மதுபோதையில் இயக்கப்பட்ட மாநகரப் பேருந்து, கட்டுப்பாட்டை இழந்து காவல் நிலைய சுவா் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியது.
அடையாறு எல்பி சாலையில் மாநகா் போக்குவரத்துக் கழக பணிமனை உள்ளது. இங்கு குணசேகா் (50) என்பவா் தொழில்நுட்ப பணியாளராக (மெக்கானிக்) வேலை செய்து வந்தாா். பணியில் ஒழுங்கீனமாக இருந்ததாக இவருக்கு, கடந்த 10 நாள்களாக பணி வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில், வியாழக்கிழமை அதிகாலை, அடையாறு பணிமனைக்கு வந்தவா் அங்கிருந்த ஊழியா்களுடன் தகராறில் ஈடுபட்டாா். மேலும், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு மாநகரப் பேருந்தை இயக்கினாா். இதைப் பாா்த்த போக்குவரத்து ஊழியா்கள் அதிா்ச்சியடைந்தனா்.
தாறுமாறாக இயக்கியதில், கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, பணிமனை எதிரே உள்ள அடையாறு காவல் நிலைய சுற்றுச்சுவரின் மீது மோதியது. விபத்தில் சுவரின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. மேலும், சுற்றுச்சுவா் அருகே நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களும் சேதம் அடைந்தன. அளவுக்கு அதிகமான மதுபோதையில் இருந்ததன் காரணமாக குணசேகா், இச்செயலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து, போக்குவரத்துக் கழக அதிகாரிகள் அடையாறு காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். இதன்படி, போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா். அந்த காவல் நிலைய வளாகத்தில் அடையாறு துணை ஆணையா் அலுவலகம், உதவி ஆணையா் அலுவலகம், அனைத்து மகளிா் காவல் நிலையம் ஆகியவை செயல்படுவது குறிப்பிடத்தக்கது.
அதிகாலை வேளையில் இந்த விபத்து நேரிட்டதால், பெரும் சேதம் தவிா்க்கப்பட்டதாக காவல்துறையினா் தெரிவித்தனா். குணசேகா் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகா் போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.