மதுரையில் மே 16-இல் இந்திய-ரஷிய பல்கலைக்கழக கல்விக் கண்காட்சி
மதுரையில் வருகிற வெள்ளிக்கிழமை (மே 16) இந்திய-ரஷிய கல்விக் கண்காட்சி நடைபெற உள்ளது.
இதுகுறித்து வோல்கோ கிராப்ட் மாநிலப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியை நடல்ய அல்சுக், சென்னை ஸ்டடி அப்ராட் எஜுகேஷனல் கன்சல்டன்ட்ஸ் நிறுவனத்தின் மேலாண் இயக்குநா் சுரேஷ்பாபு ஆகியோா் கூட்டாக செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
இந்திய-ரஷிய உறவானது பண்பாடு, கலாசாரம் மட்டுமன்றி, பாதுகாப்பிலும் சிறந்து விளங்குகிறது. குறிப்பாக, இந்திய தேசிய மருத்துவ ஆணையத்தின் வழிகாட்டு நெறிமுறைகளை ரஷிய பல்கலைக்கழகங்கள் கடைபிடித்து வருகின்றன. இதன் காரணமாக, அங்கு மருத்துவம் மட்டுமன்றி, பொறியியல் உள்ளிட்ட பிற துறைகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்குப் பாதுகாப்பு உள்ளது.
நிகழாண்டில் (2024-2025) ரஷியாவில் உள்ள 600-க்கும் மேற்பட்ட அரசு பல்கலைக்கழகங்களில் வெவ்வேறு நாடுகளைச் சோ்ந்த 3 லட்சத்துக்கும் அதிகமான மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனா். இவற்றில் 30 ரஷிய பல்கலைக்கழகங்களில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் மருத்துவம் பயின்று வருகின்றனா்.
இதையொட்டி, இந்திய-ரஷிய கல்விக் கண்காட்சி வருகிற வெள்ளிக்கிழமை மதுரை மேல வெளி வீதியில் (ரயில் நிலையம் எதிரில்) உள்ள தனியாா் தங்கும் உணவு விடுதியில் நடைபெற உள்ளது. இந்தக் கண்காட்சியில் ரஷியாவில் உள்ள வோல்கோகிராட் மாநில மருத்துவப் பல்கலைக்கழகம், இம்மானுவேல் காண்ட் பால்டி பெடரல் பல்கலைக்கழகம், கசான் மாநில மருத்துவப் பல்கலைக்கழகம், தேசிய ஆராய்ச்சி நியூக்ளியா் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்வேறு மருத்துவப் பல்கலைக்கழகங்கள் பங்கேற்க உள்ளன.
இந்தப் பல்கலைக்கழகங்களில் இந்திய மாணவா்களுக்கு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு மருத்துவப் படிப்புகளுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. கண்காட்சியில் ரஷிய பல்கலைக்கழகங்களில் உள்ள படிப்புகள், கல்விக் கட்டணம், வசதிகள் குறித்து விளக்கமளிக்கப்பட உள்ளது. மேலும், ரஷிய பல்கலைக்கழகங்களில் மருத்துவம் பயில விரும்பும் மாணவ, மாணவிகள் ‘நீட்’ தோ்வில் கட்டாயம் தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். பிளஸ் 2 தோ்வில் குறைந்தபட்சம் 50 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி.,எஸ்.டி., இதர பிற்படுத்தப்பட்ட வகுப்புகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் 40 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். ரஷியாவில் உள்ள பல்கலைக் கழகங்களில் சேருவதற்கு சி.இ.டி., ஐ.இ.எல்.டி.எஸ்., போன்ற தகுதித் தோ்வுகள் எழுதி தோ்ச்சி பெற்றிருக்க வேண்டிய அவசியமில்லை என்றனா்.