தமிழகத்தில் 511 விடுதிகளில் உள்ள மாணவிகளுக்கு தற்காப்புப் பயிற்சி: அமைச்சா் சிவ...
மதுரை மழலையர் பள்ளியில் குழந்தை பலி; தாளாளர் உள்பட ஐந்து பேர் கைது
மதுரை கேகே நகர் பகுதியில் உள்ள தனியார் மழலையர் பள்ளியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி தண்ணீர் தொட்டியில் விழுந்து பலியான சம்பவத்தில் பள்ளி தாளாளர் உள்பட ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப் செய்து மதுரை அண்ணாநகர் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.
மதுரை கேகே நகர் பகுதியில் இயங்கி வரக்கூடிய மழலையர் பள்ளியில் கோடைகால பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்த மழலையர் பள்ளியை திவ்யா என்பவர் நடத்தி வருகிறார், கோடைகால பயிற்சி முகாமில் நான்கு ஆசிரியர்கள், தாளாளர் ஆகியோர் மதுரை மாநகரில் உள்ள பல்வேறு பள்ளியில் பயிலக்கூடிய மற்ற பள்ளி மழலையர்கள் இந்த கோடைகால சிறப்பு வகுப்பில் பயின்று வருகிறார்கள்.
மதுரை உத்தங்குடி பகுதியைச் சேர்ந்த அமுதன் என்பவரது நான்கு வயது மகள் ஆருத்ரா, மழலையர் பள்ளியில் தனது நண்பர்களுடன் பள்ளி வளாகத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது பள்ளி வளாகத்தில் சுமார் 12 அடி ஆழம் கொண்ட தண்ணீர் தொட்டிக்குள் எதிர்பாராத விதமாக உள்ளே விழுந்துள்ளார்.
இதைக் கண்ட மற்ற குழந்தைகள் உடனடியாக மழலையர் பள்ளி ஆசிரியர்களுக்கு தகவல் தெரிவிக்க உடனடியாக அங்கு ஓடி வந்த ஆசிரியர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அரை மணி நேரம் போராடி தொட்டிக்குள் கிடந்த சிறுமியை மீட்டு பள்ளி அருகே 100 மீட்டர் தொலைவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
தொடர்ந்து மீட்கப்பட்ட சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் குழந்தை அதிகளவு தண்ணீர் குடித்ததால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் இச்சம்பம் தொடர்பாக அண்ணா நகர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தாளாளர் திவ்யா மற்றும் மழலையர் பள்ளி ஆசிரியர்கள் நான்கு பேர் உள்பட ஐந்து பேரை அண்ணாநகர் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் குழந்தை உயிரிழந்தது தொடர்பாக பள்ளி நிர்வாகத்தின் தரப்பில் இருந்து குழந்தையின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்காமல் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. சம்பவம் தொடர்பாக பள்ளியில் பயிலும் மற்ற மாணவர்களின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்க உடனடியாக மற்ற குழந்தைகளின் பெற்றோர்கள் பள்ளிக்கு வந்து தங்களது குழந்தைகளை அழைத்துச் சென்றனர்.
மழலையர் பள்ளியில் கோடைகால பயிற்சியின் போது 12 அடி ஆழம் கொண்ட தண்ணீர் தொட்டிக்குள் 4 வயது குழந்தை ஆருத்ரா விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. முறையாக அனுமதியுடன் மழலையர் பள்ளி இயங்கியதா என்பது குறித்தும் முறையான பாதுகாப்பு வசதிகள் உடன் பள்ளி இயக்கப்பட்டதா என்பது குறித்தும் போலீசார் மற்றும் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.