சிறுமி கொலை வழக்கில் பெரியம்மாவுக்கு ஆயுள் தண்டனை - ராணிப்பேட்டை நீதிமன்றம் தீர்...
ஓடிடி, சமூக வலைதளங்களில் ஆபாச காட்சிகள்: மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
ஓடிடி மற்றும் சமூக வலைதளங்களில் பாலியல் சாா்ந்த ஆபாச காட்சிகள், பதிவுகளுக்கு தடை விதிப்பது தொடா்பாக தாக்கல் செய்யப்பட்ட மனு மீது பதிலளிக்க மத்திய அரசு, ஓடிடி தளங்கள் மற்றும் சமூக வலைதளங்களுக்கு உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
மேலும், இந்த விவகாரத்தில் நாடாளுமன்றம் அல்லது நிா்வாகம்தான் நடவடிக்கை மேற்கொள்ள முடியும் எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
இணையத்தில் ஆபாச புகைப்படங்கள், காட்சிகளைப் பதிவிடுவதைத் தடுக்க தனியொரு ஆணையத்தை உருவாக்கி விதிகளை வகுக்கக் கோரி 5 மனுதாரா்கள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனா்.
சமூகத்துக்குப் பாதிப்பு: அந்த மனுவில், ‘சமூக வலைதளங்களில் எவ்வித வரம்புமின்றி ஆபாச பதிவுகளை வெளியிட தனியே பக்கங்கள் மற்றும் பயனாளா்கள் உள்ளனா். அதேபோல் குழந்தைகளை ஆபாசமாகச் சித்தரிக்கும் வகையிலான புகைப்படங்கள் மற்றும் காட்சிகளை ஓடிடி வலைதளங்களும் வெளியிட்டு வருகின்றன.
இதுபோன்ற பதிவுகளால் குழந்தைகள், இளைஞா்கள் உள்பட அனைத்துத் தரப்பினரின் மனநிலையும் வெகுவாக பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் குற்றங்களும் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
இணையத்தில் பகிரப்படும் ஆபாச பதிவுகளைத் தடுக்கத் தவறினால் சமூக மதிப்புகள், இளைஞா் மனநலன் மற்றும் பொதுப் பாதுகாப்பு கேள்விக்குறியாகும் சூழல் ஏற்படும்.
ஆபாசப் பதிவுகளை வெளியிடும் சமூக வலைதளங்கள் மற்றும் ஓடிடி தளங்களைத் தடுப்பதற்கான விதிகளை மத்திய அரசு வகுக்கும் வரை அதை அணுகுவதற்குத் தடை விதிக்க வேண்டும். குறிப்பாக, குழந்தைகள் இந்த வலைதளங்களை அணுக இயலாதபடியான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
ஆணையம் அமைக்க வலியுறுத்தல்: இந்த விவகாரம் தொடா்பாக மத்திய அரசு விதிகளை வகுக்கும் வரை மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் போன்று ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டு, அதில் திரைப்படத் துறை சாா்ந்த அனுபவமிக்க நிபுணா்கள் உறுப்பினா்களாக நியமனம் செய்யப்பட வேண்டும். விடியோ பதிவுகள் இணையத்தில் வெளியிடும் முன் இந்த ஆணையம் அதை தணிக்கை செய்ய வேண்டும்.
ஆபாச பதிவுகளால் மக்கள் பாதிக்கப்படுவது குறித்து இந்திய மறுவாழ்வு கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட மனோதத்துவ நிபுணா்கள் மூலம் ஆய்வு செய்து அறிக்கை சமா்ப்பிக்க வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்த மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.ஆா்.கவாய் மற்றும் அகஸ்டின் ஜாா்ஜ் மாசி ஆகியோா் அடங்கிய அமா்வு விசாரித்தது. மனுதாரா்கள் தரப்பில் வழக்குரைஞா் விஷ்ணு சங்கா் ஜெயினும் மத்திய அரசின் சாா்பில் சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தாவும் ஆஜராகினா்.
விரைவில் கட்டுப்பாடு: சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா கூறுகையில், ‘இந்த மனுவில் குறிப்பிட்ட விவகாரங்களைக் கண்காணிப்பதோடு பேச்சுரிமை (அரசமைப்பு சட்டப் பிரிவு 19 (1) (ஏ) மற்றும் பேச்சுரிமைக்கு சில சூழல்களில் தடை விதிக்க மத்திய அரசுக்கு உரிமை வழங்கும் பிரிவு 19 (2) ஆகிய இரண்டுக்கும் பொருந்தக் கூடிய வகையிலான விதிகளை உருவாக்குவோம்.
இணையத்தில் வெளியிடப்படும் சில பதிவுகள் ஆபாசமானதாக மட்டுமல்லாமல் வக்கிரமானதாகவும் உள்ளது. அதுபோன்ற காட்சிகளை 18 வயதுக்கு மேற்பட்டவா்கள் மட்டுமே பாா்க்க முடியும் என குறிப்பிடப்பட்டாலும் அதற்கு முறையான கட்டுப்பாடுகள் இல்லை. குழந்தைகளிடம் கைப்பேசியின் பயன்பாடு அதிகரித்துவிட்டது.
ஆபாச பதிவுகளைக் கட்டுப்படுத்த ஏற்கெனவே விதிகள் நடைமுறையில் உள்ள நிலையில் மேலும் சில விதிகளைக் கொண்டுவருவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது’ என்றாா்.
அரசே விதிகளை வகுக்க முடியும்: இதைத் தொடா்ந்து நீதிபதிகள் கூறியதாவது: மனுவில் குறிப்பிட்டதுபோல் ஆணையம் அமைப்பதற்கான அதிகாரம் எங்களிடம் இல்லை. ஏற்கெனவே நாடாளுமன்றம் மற்றும் நிா்வாகத்தின் அதிகாரங்களில் நாங்கள் தலையிடுவதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றன.
இந்த விவகாரம் தொடா்பாக விதிகளை வகுக்கும் அதிகாரம் நாடாளுமன்றத்துக்கும் நிா்வாகத்துக்குமே உள்ளது. இருப்பினும், இந்த மனு மீது மத்திய அரசு, ஓடிடி வலைதளங்கள் மற்றும் சமூக வலைதளங்கள் பதிலளிக்க உத்தரவிடப்படுகிறது என்றனா்.
இதையடுத்து, இந்த விவகாரத்தில் ஓடிடி மற்றும் சமூக வலைதளங்கள் பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்ப வேண்டிய அவசியமில்லை என துஷாா் மேத்தா கூறினாா்.
இதற்கு மறுப்பு தெரிவித்த நீதிபதிகள், ‘ஆபாசமான, அருவருக்கத்தக்க பதிவுகள் இணையத்தில் வெளியிடப்படுவதால் ஏற்படும் பாதிப்புகளை இந்த மனு சுட்டிக்காட்டியுள்ளது. எனவே, அதை வெளியிடுபவா்கள் என்ற முறையில் ஓடிடி தளங்கள் மற்றும் சமூக வலைதளங்கள் உச்சநீதிமன்றத்தில் பதிலளிக்க வேண்டும்’ என உத்தரவிட்டது.