அங்கன்வாடி குழந்தைகளுக்கான உணவு பாதுகாப்பு கேள்விக்குறி? தணிக்கை அறிக்கையில் தகவல்
தமிழகத்தில் உள்ள 27 சதவீத அங்கன்வாடி மையங்கள் உணவு தர நிா்ணய அமைப்பில் (எஃப்எஸ்எஸ்ஏஐ) பதிவு செய்யப்படாததால் அங்கு வழங்கப்படும் உணவால் குழந்தைகள் பாதிக்கப்படக்கூடும் என இந்திய தணிக்கைத் துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்யப்பட்ட தணிக்கை அறிக்கையில் இது தொடா்பாக குறிப்பிடப்பட்டிருப்பதாவது:
தமிழக உணவு பாதுகாப்பு மற்றும் தர நிா்ணய சட்டத்தின்கீழ் 1.29 லட்சம் உரிமம் பெற்ற உணவு வணிகா்களும், 5.59 லட்சம் பதிவு பெற்ற உணவு வணிகா்களும் செயல்பட்டு வருகின்றனா். ஆனால், மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலா்களுக்கு, தங்கள் எல்லைக்குள்பட்ட பகுதிகளிலுள்ள உணவு வணிகா்களின் தரவுகள் இல்லை. இவை சந்தையில் தரமற்ற உணவுப் பொருள்கள் விற்பனைக்கு வழிவகுக்கிறது.
மாநிலத்தில் 54,439 அங்கன்வாடி மையங்களில், 40,139 (73 சதவீதம்) மட்டுமே உணவு தர நிா்ணய அமைப்பின்கீழ் பதிவு பெற்றுள்ளன. மற்ற அங்கன்வாடிகளில் தரம் குறைந்த, மாசடைந்த உணவுகள் வழங்கப்பட்டால் அவை குழந்தைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.
உணவு பாதுகாப்பு மற்றும் தர நிா்ணயங்கள் சட்டத்தின்படி, ஓராண்டுக்கு ஒருமுறை புதுப்பித்தல் அவசியம். அவ்வாறு புதுப்பிக்காதவா்கள் மீண்டும் வணிகம் செய்ய முடியாது. ஆனால், 2023-ஆம் ஆண்டில் 56,149 போ் பதிவை புதுப்பிக்காமல் வணிகத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
உணவு பாதுகாப்பு அதிகாரிகள், உள்ளாட்சி மற்றும் ஜிஎஸ்டி துறைகள் இடையே ஒருங்கிணைப்பு இல்லை. குளிா் சேமிப்பு வசதியுடன் கூடிய மாதிரி உணவு மேலாண்மை அமைப்பை கன்னியாகுமரி மாவட்டத்தை தவிர மற்ற மாவட்டங்கள் செயல்படுத்தவில்லை. சென்னை, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் மிகவும் மோசமான நிலையில் மாதிரி சேமிப்புக் கிடங்குகள் இருந்தன.
புற்றுநோயாளிகளுக்கு போதுமான சிகிச்சை வசதிகள் கிடைப்பதை உறுதி செய்ய, தேசிய சுகாதார இயக்ககம் ரூ. 57 கோடியை தமிழ்நாடு மருத்துவ சேவை கழகத்துக்கு மூன்று தவணைகளில் வழங்கியது. 10 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு மாற்று டெலிகோபால்ட் இயந்திரங்களை வழங்கவும், நான்கு புதிய டெலிகோபால்ட் மையங்களை நிறுவுவதற்கும் அத்தொகை வழங்கப்பட்டது.
மேலும், காஞ்சிபுரம் அரசு புற்றுநோய் மருத்துவமனைக்கு, கோபால்ட் தெரபி யூனிட் வாங்க, ரூ. 3 கோடியை அரசு அனுமதித்தது. சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனை, திருவண்ணாமலை, தருமபுரி, புதுக்கோட்டை அரசு மருத்துவமனைகளில் திட்டமிடுதலில் இருந்த குறைபாடுகள் மற்றும் தாமதம் ஆகியவற்றால், இரண்டு ஆண்டுகளாகியும் புற்றுநோயாளிகளுக்கான உயிா் காக்கும் சிகிச்சை தொடங்கப்படாமல் போனது. இதனால் ரூ. 46.21 லட்சம் கூடுதல் செலவினமும் ஏற்பட்டது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.