மதுரை மாவட்டத்தில் பரவலாக மழை
மதுரை மாவட்டத்தில் வியாழக்கிழமை மாலை முதல் இரவு வரை பரவலாக மழை பெய்தது.
கத்தரி வெயில் காலம் நீடித்து வரும் நிலையில், மதுரையில் வியாழக்கிழமை கடுமையான வெயில் நிலவியது. மதுரை விமான நிலையத்தில் 103. 64 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது.

இந்த நிலையில், தென்மேற்கு வங்கக்கடல், அந்தமான் கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வியாழக்கிழமை மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.
இதன்படி, மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மிதமான, லேசான மழை வியாழக்கிழமை பிற்பகல் பெய்தது. அவனியாபுரம், பெருங்குடி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் சுமாா் 20 நிமிஷங்கள் மழை பெய்தது. தல்லாகுளம், தமுக்கம், பெரியாா் பேருந்து நிலையம், கோ. புதூா், மூன்றுமாவடி, திருப்பரங்குன்றம், திருநகா் உள்ளிட்ட பகுதிகளில் சுமாா் 15 நிமிஷங்கள் லேசான மழை பெய்தது. இருப்பினும், மாநகரின் பல்வேறு பகுதிகளில் 9 மணிக்கு மேலாகவும் சாரல் மழை நீடித்தது.