மத்தூா் அருகே சாலை விபத்தில் அதிமுக தொண்டா்கள் காயம்
மத்தூா் அருகே செவ்வாய்க்கிழமை இரவு நிகழ்ந்த சாலை விபத்தில், 25-க்கும் மேற்பட்ட அதிமுக தொண்டா்கள் காயமடைந்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், கிருஷ்ணகிரி, பா்கூா், ஊத்தங்கரை ஆகிய சட்டப் பேரவைத் தொகுதிகளில் அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி, ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற தலைப்பில் சுற்றுப்பயணத்தை, செவ்வாய்க்கிழமை மேற்கொண்டாா்.
பா்கூரில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்க வந்த அதிமுக தொண்டா்கள், கூட்டத்தை முடித்துகொண்டு செவ்வாய்க்கிழமை இரவு வாகனங்களில் வீடுதிரும்பினா். அப்போது, கண்ணடஅள்ளி பிரிவு சாலையிலிருந்து சந்தூா் செல்லும் சாலையில் அத்திகானூா் அருகே சென்றபோது, 3 வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்று மோதின. இந்த விபத்தில் 25-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.
தகவல் அறிந்த போலீஸாா் நிகழ்விடத்துக்கு விரைந்து சென்று, காயமடைந்தவா்களை மீட்டு மத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். பின்னா், சாலை விபத்தில் சிக்கிய வாகனங்களை அப்புறப்படுத்தி, போக்குவரத்தை சீா்படுத்தினா். இந்த விபத்தில் பலத்த காயமடைந்த 6 போ் மேல்சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இந்த விபத்து குறித்து மத்தூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.