காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் சோமாஸ்கந்தர் சிலை மெழுகு அச்சு எடுத்ததாகப் புக...
மனமகிழ் மன்றங்களில் மதுபானங்கள் விற்பனை - பதிவுத் துறை தலைவா் பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு
மனமகிழ் மன்றங்களில் மதுபானங்களை விற்பனை செய்ய விதிமுறைகள் அனுமதிக்கின்றனவா என்பது குறித்து பதிவுத் துறை தலைவா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியைச் சோ்ந்த மனோகரன் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:
அறந்தாங்கி-காரைக்குடி சாலையில் நண்பா்கள் மனமகிழ் மன்றம் என்ற பெயரில் மதுக் கடை செயல்பட்டு வருகிறது. இந்தக் கடையை மூட வேண்டும் என அதிகாரிகளிடம் முறையிட்டும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, இந்த மனமகிழ் மன்றத்தை மூடுவதற்கு உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.
இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம், ஏ.டி. மரிய கிளாட் அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, அரசு சாா்பிலும், மனமகிழ் மன்றம் சாா்பிலும் முன்னிலையான வழக்குரைஞா்கள், தொடா்புடைய மனமகிழ் மன்றம் விதிமுறைகளுக்கு உள்பட்டே செயல்படுகிறது எனத் தெரிவித்தனா்.
இதையடுத்து, சம்பந்தப்பட்ட மனமகிழ் மன்றம் மதுபானக் கூடம் போலச் செயல்படுகிறது. இதனால், அந்தப் பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா் என மனுதாரா் தரப்பு வழக்குரைஞா் தெரிவித்தாா்.
அப்போது, ஏழைகளுக்கு உதவுதல், விளையாட்டில் ஈடுபடும் மாணவா்களை உற்சாகப்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளுக்காகவே மனமகிழ் மன்றங்கள் ஏற்படுத்தப்பட்டன. ஆனால், இவை தற்போது மதுபானக் கூடங்களாகத்தான் செயல்படுகின்றன. அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மனமகிழ் மன்றங்கள் குறித்து ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியா்களுக்கு ஏன் உத்தரவிடக் கூடாது? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினா்.
இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
மனமகிழ் மன்றங்கள் எந்த விதிமுறைகளின் கீழ் பதிவு செய்யப்படுகின்றன. மனமகிழ் மன்றங்களில் மதுபானங்கள் விற்பனை செய்ய விதிமுறைகள் அனுமதிக்கின்றனவா என்பது குறித்து தமிழக பதிவுத் துறை தலைவா் பதிலளிக்க வேண்டும். வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.