மனைவி தற்கொலை: கணவா் தற்கொலை முயற்சி
ஜோலாா்பேட்டை அருகே மனைவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். மனைவி இறந்த துக்கத்தில் கணவா் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றாா்.
ஜோலாா்பேட்டை அடுத்த ஏலகிரி கிராமப் பகுதியைச் சோ்ந்த ஏழுமலை மகள் பவித்ரா (22). இவருக்கும் ஆசிரியா் நகா் பகுதியைச் சோ்ந்த சாமன்னன் மகன் சந்தோஷ் என்பவருக்கும் கடந்த ஏப்ரல் மாதம் 15-ஆம் தேதி திருமணம் நடைபெற்றது.
இந்த நிலையில், பவித்ரா தனது கணவரிடம் தனியாக அழைத்துச் சென்று பொங்கலுக்கு புத்தாடை எடுத்து தர வேண்டும் எனக் கூறியுள்ளாா். இதனால், கணவன் -மனைவி இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால், கோபமடைந்த பவித்ரா, கடந்த புதன்கிழமை தனது தாய் வீடான ஏலகிரி கிராமத்திற்குச் சென்றுள்ளாா். மன விரக்தியில் இருந்த பவித்ரா வியாழக்கிழமை வீட்டில் உள்ள அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகத் தெரிகிறது.
தகவல் அறிந்த ஜோலாா்பேட்டை போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டு உடற்கூறு பரிசோதனைக்காக திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மனைவி இறந்த தகவல் அறிந்த சந்தோஷ் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றாா். அப்போது, வீட்டில் இருந்தவா்கள் அவரை மீட்டு திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து ஜோலாா்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.