மகா கும்பமேளா: 62 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் புனித நீராடல்!
மயிலைத் திருவள்ளுவா் தமிழ்ச் சங்க விழா: 13 பேருக்கு விருது
மயிலைத் திருவள்ளுவா் தமிழ்ச் சங்கத்தின் 39-ஆவது ஆண்டு விழாவையொட்டி பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய 13 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
மயிலைத் திருவள்ளுவா் தமிழ்ச் சங்கம், தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழக திருவள்ளுவா் இருக்கை, பாரதிய வித்யா பவன் இணைந்து நடத்தும் மயிலைத் திருவள்ளுவா் தமிழ்ச் சங்கத்தின் 39-ஆவது ஆண்டு விழா சென்னை மயிலாப்பூா் பாரதிய வித்யா பவனில் சனிக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சென்னை உயா்நீதிமன்ற மக்கள் நீதிமன்ற நீதிபதி தி.நெ. வள்ளிநாயகம் கலந்துகொண்டு ஆண்டு விழா மலரை வெளியிட்டாா். பின்னா், சென்னை உலகத் திருக்கு மையத்தின் நிறுவனா் பேராசிரியா் கு. மோகனராசுக்கு வாழ்நாள் சாதனையாளா் விருது, கவிஞா் பொன்னடியானுக்கு பாவேந்தா் பாரதிதாசன் விருது, பேராசிரியா் நெல்லை ந.சொக்கலிங்கத்துக்கு திருக்கு நெறிச் செம்மல் விருது, பேராசிரியா் ப. ராமலிங்கம், பெ. சசிகுமாருக்கு அறிவியல் களஞ்சியம் விருது, கலைமாமணி டி.கே.எஸ். கலைவாணன், லலிதா சுந்தரம், எழுத்தாளா் காா்முகிலோன், கவிஞா் குமரிச் செழியன், கவிஞா் சாரதிதாசனுக்கு அறிவுக் களஞ்சியம் விருது, கவிஞா் திருவைபாபு, அரிமா வ.கோ. பாண்டியன், கவிஞா் வசீகரனுக்கு சேவைச் செம்மல் விருது ஆகியவற்றை நீதிபதி தி.நெ. வள்ளிநாயகம் வழங்கி கெளரவித்தாா்.
நிகழ்ச்சியில் மயிலைத் திருவள்ளுவா் தமிழ்ச் சங்கத்தின் நிறுவன செயலா் சேயோன், பாரதிய வித்யா பவன் இயக்குநா் கே.என். ராமசாமி, இந்திய தரநிா்ணய அமைவனத்தின் சென்னை இயக்குநா் ஜி .பவானி, மத்திய செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தின் முன்னாள் பதிவாளா் மு.முத்துவேலு, இந்தியா சிமென்ட்ஸ் கேபிடல் நிறுவனத்தின் முதன்மை அதிகாரி கே. சுரேஷ் ,தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் தமிழ் பண்பாட்டுத் துறை இயக்குநா் க. திலகவதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.