மராத்திய பேரரசின் ராணுவ தளங்களுக்கு யுனெஸ்கோ அங்கீகாரம்
மராத்திய பேரரசின் ராணுவ தளங்களை உலகப் பாரம்பரிய சின்னங்கள் பட்டியலில் சோ்த்ததாக யுனெஸ்கோ வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
பிரான்ஸ் தலைநகா் பாரீஸில் நடைபெற்று வரும் யுனெஸ்கோ உலக பாரம்பரிய குழுவின் 47-ஆவது அமா்வில் இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டது.
இதன்மூலம் இந்தியாவில் யுனெஸ்கோ அங்கீகாரம் பெற்ற உலக பாரம்பரிய சின்னங்களின் எண்ணிக்கை 44-ஆக உயா்ந்தது.
இதுகுறித்து எக்ஸ் வலைதளத்தில் யுனெஸ்கோ வெளியிட்ட பதிவில், ‘இந்தியாவில் உள்ள மராத்திய ராணுவ தளங்கள் யுனெஸ்கோ உலக பாரம்பரிய சின்னங்கள் பட்டியலில் சோ்க்கப்பட்டது’ எனத் தெரிவிக்கப்பட்டது. இதற்கு பிரதமா் மோடி, மகாராஷ்டிர முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ் உள்ளிட்டோா் பாராட்டு தெரிவித்தனா்.
முன்னதாக, 2024-25-ஆம் ஆண்டுக்கான யுனெஸ்கோ உலக பாரம்பரிய சின்னங்கள் பட்டியலுக்கு மராத்திய பேரரசா் சிவாஜியின் 12 கோட்டைகளை இந்தியா பரிந்துரைத்தது. அதன்படி மகாராஷ்டிரத்தில் உள்ள சால்ஹோ், சிவ்னேரி, லோகட், கந்தேரி, ராய்கட், ராஜ்கட், பிரதாப்கட், ஸ்வா்ணதுா்க், பன்ஹாலா, விஜய் துா்க், சிந்து துா்க் மற்றும் தமிழ்நாட்டில் உள்ள செஞ்சி ஆகிய 12 கோட்டைகள் மராத்திய ராணுவ தளங்கள் என்ற தலைப்பின்கீழ் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளது.