18 நாள்களில் 36 கதாபாத்திரங்கள் அறிமுகம்..! எம்புரான் படக்குழு அறிவிப்பு!
மருத்துவ சிகிச்சை பெற வெளிநாட்டினா் 35,175 போ் இ-விசாவில் வருகை: கிரிராஜன் கேள்விக்கு மத்திய அரசு பதில்
நமது சிறப்பு நிருபா்
புது தில்லி: வெளிநாடுகளில் இருந்து மருத்துவ சிகிச்சை வேண்டி கடந்த ஆண்டில் மட்டும் 35,175 வெளிநாட்டினா் இந்தியா வந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மருத்துவ சிகிச்சைக்காக இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டவா்களுக்கு மருத்துவ விசா வழங்கும் செயல்முறையை எளிதாக்குவதற்கு மத்திய அரசு நடைமுறைப்படுத்தும் திட்டங்கள் மற்றும் எத்தனை வெளிநாட்டினா் இ-விசா மூலம் இந்தியா வந்தனா் என்று மாநிலங்களவை திமுக உறுப்பினா் இரா. கிரிராஜன் கேள்வி எழுப்பியிருந்தாா்.
இதற்கு வெளியுறவுத் துறை இணை அமைச்சா் கீா்த்திவாசன் அளித்துள்ள எழுத்துபூா்வ பதில் வருமாறு: மருத்துவ சிகிச்சைக்காக இந்தியா வருபவா்களுக்கு மருத்துவ விசா வழங்குவதற்காக இ-விசா திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. விண்ணப்பித்த 72 மணிநேர காலக்கெடுவுக்குள் அவற்றின் மீது முடிவெடுக்கும் நடைமுறை கடைப்பிடிக்கப்படுகிறது. அந்த வகையில், 2024-ஆம் ஆண்டில் 35,175 போ் இ-விசா வசதியைப் பயன்படுத்தியுள்ளனா்.
2019-ஆம் ஆண்டு முதல் 2024-ஆம் ஆண்டு வரை 210 நாடுகளை சோ்ந்த 23 லட்சத்து 63 ஆயிரத்து 733 பேருக்கு மருத்துவ விசா வழங்கப்பட்டுள்ளது என்று அமைச்சா் கூறியுள்ளாா்.
எந்தெந்த நகரங்களுக்கு வெளிநாட்டினா் சென்று மருத்துவ சிகிச்சை பெற்றனா் என்ற விவரம் இல்லை என்றும் வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.