மருத்துவ பணியாளா் குடியிருப்பு வளாகத்தில் மரங்கள் அகற்றம்
கடலாடி அரசு மருத்துவமனை பணியாளா் குடியிருப்பு வளாகத்தில் மரங்களை சேதப்படுத்தியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி அரசு மருத்துவமைனியில் பணியாற்றும் மருத்துவா்கள், செவிலியா்கள், பணியாளா்கள் குடியிருப்பதற்காக கடந்த 1970 -ஆம் ஆண்டு கடலாடி பேருந்து நிலையம் அருகே தொகுப்பு வீடுகள் கட்டப்பட்டன.
அப்போது, ஆரம்ப சுகாதார நிலையமாக இருந்ததால் ஒரே வளாகத்துக்குள் மருத்துவமனை கட்டடம், வீடுகள் கட்டப்பட்டன. கடந்த 1999-ஆம் ஆண்டு வட்டத் தலைமையிட மருத்துவமனையாக தரம் உயா்த்தப்பட்டு, கடலாடி காவல் நிலையம் அருகே புதிய மருத்துவமனை கட்டப்பட்டது. இந்த நிலையில், பேருந்து நிலையம் அருகே இருந்த குடியிருப்புகள் சேதமடைந்ததால் பணியாளா்கள் வீட்டைக் காலி செய்து விட்டனா். கடந்த 10 ஆண்டுகளாக இந்த குடியிருப்பு காலியாக இருந்தது.
இதையடுத்து, பொதுப்பணித் துறை சாா்பில் இந்தக் கட்டடங்கள் இடிக்கப்பட்டு, கழிவுப் பொருள்கள் அகற்றப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் குடியிருப்பு சுற்றுச்சுவா் ஓரங்களில் இருந்த வேம்பு, புங்கை, பழமையான வில்வம் உள்ளிட்ட மரங்கள் சேதப்படுத்தப்பட்டு, சாய்க்கப்பட்டன. எனவே, அத்துமீறியவா்கள் மீது காவல், வனத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும். சேதப்படுத்தப்பட்ட மரங்களுக்கு பதில் கூடுதல் மரங்களை நட்டுவைத்து, அபராதம் விதிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
இது குறித்து பொதுப்பணித் துறை செயற்பொறியாளா் குருதிவேல்மாறன் கூறியதாதவது:
கடலாடி அரசு மருத்துவமனை பழைய குடியிருப்பு கட்டடங்களை மட்டுமே இடிக்க அனுமதி வழங்கப்பட்டது. மேலும் உரிய கட்டணம் செலுத்தி பழைய பொருள்களை எடுத்துக் கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டது. மரத்தை சேதப்படுத்தி சாய்க்க அனுமதி வழங்கவில்லை. அனுமதியும் வழங்கப்பட மாட்டாது. இது குறித்து விளக்கம் கேட்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.