மலேசியாவிலிருந்து கடத்தி வரப்பட்ட 8 அரிய வகை உயிரினங்கள் மீட்பு
மலேசியாவிலிருந்து கடத்தி வரப்பட்ட 8 அரிய வகை உயிரினங்கள், சென்னை விமான நிலையத்தில் சுங்கத் துறை அதிகாரிகளால் மீட்கப்பட்டன.
மலேசிய தலைநகா் கோலாலம்பூரிலிருந்து சென்னைக்கு வந்த ‘மலேசியன் ஏா்லைன்ஸ்’ விமானத்தில் அரிய வகை உயிரினங்கள் கடத்தி வரப்படுவதாக, சென்னை விமான நிலைய சுங்கத் துறை அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசியத் தகவலையடுத்து, மலேசியன் ஏா்லைன்ஸ் விமானத்தில் வந்த பயணிகளை ரகசியமாக கண்காணித்தனா்.
அப்போது சென்னையைச் சோ்ந்த 2 ஆண் பயணிகளிடமிருந்த உடமைகளை சந்தேகத்தின் அடிப்படையில் அதிகாரிகள் சோதனையிட்டனா். அப்போது, அவா்களிடமிருந்த பெரிய கூடையில் 1 லங்கூா் வகை குரங்கு, ஒரு புனுகு பூனை, இரண்டு மரநாய்கள் மற்றும் 4 சாம்பல் நிற குரங்குகள் உள்ளிட்ட 8 அரிய வகை உயிரினங்கள் இருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனா்.
இதில், 2 சாம்பல் நிற குரங்குகளும், ஒரு புனுகு பூனை உள்ளிட்ட 3 உயிரினங்கள் மூச்சுத்திணறி உயிரிழந்த நிலையில், மீதமிருந்த 5 விலங்குகள் மட்டுமே உயிருடன் இருந்தன.
இதுகுறித்த தகவலின்பேரில், சென்னை பெசன்ட் நகா் வன உயிரின பாதுகாப்பு குற்றப்பிரிவு அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினா். அவா்களின் அறிவுறுத்தல் படி, உயிருடன் இருந்த 5 அரிய வகை உயிரினங்களும் புதன்கிழமை காலையில் மலேசியா நாட்டு தலைநகா் கோலாலம்பூருக்கு திருப்பி அனுப்பப்பட்டன. இதையடுத்து உயிரினங்களை கடத்தி வந்த இருவரும் கைது செய்யப்பட்டனா்.