"Salomiya was actually the first title for Dude; Because" - Keerthiswaran | Prad...
மழைக்கால உணவுகள்: சாப்பிட வேண்டியவை; சாப்பிடக்கூடாதவை! மருத்துவர் அட்வைஸ்
’ஹைய்யா! மழை’ என துள்ளிக் குதிக்க வைப்பதும், ’ஹைய்யோ... மழை’ என சலித்துக்கொள்ள வைப்பதும் என இரு வேறு உணர்ச்சிகளை நம்மிடம் இருந்து வரச் செய்வது இந்த மழைக்காலத்தின் சிறப்பு .
இக்காலம் எப்பொழுது தொடங்குகிறது; இக்காலத்தில் என்னென்ன உணவுகளை எடுத்துக் கொள்ளலாம்; எவற்றை தவிர்க்க வேண்டும் என்பனவற்றைப் பற்றி அரசு சித்த மருத்துவர் ஆ.சங்கீதா அவர்களிடம் கேட்டோம்.

’’மழைக்காலம் அல்லது கார்காலம் என்பது, ஆவணி மாத பிற்பகுதியில் இருந்து ஐப்பசி மாத முற்பகுதி வரையுள்ள காலமாகும்.
இக்காலத்தில் சித்த மருத்துவத்தின்படி உடலில் வாதமானது இயல்பாகவே மிகுந்து இருக்கும். ஆதலால், மழைக்காலங்களில் வியாதிகளுக்கு பஞ்சம் இருப்பதில்லை. மழைக்காலம் முழுவதும் நாம் கடைபிடிக்க வேண்டிய உணவு முறைகள் பல. அவற்றுள் சிலவற்றைப் பார்க்கலாம்.
நீரை காய்ச்சி இளம் சூடாக அருந்துதல் மழைக்கால நோய் பரவும் அபாயத்தைப் பெரிதும் குறைக்கின்றது . சுக்கு, சீரகம் இட்டு காய்ச்சிய நீர் சாலச்சிறந்தது.

எந்த உணவாக இருந்தாலும் இளம் சூடாக அருந்துவது மழைக்காலத்தில் இருக்கிற மிகுந்த வாதத்தைக் குறைத்து உணவு மூலமாக பரவும் நோய்களை ஒழிக்கும்.
பொதுவாகவே மழைக்காலத்தில் ஜீரண சக்திக் குறைவாக இருக்கும். ஆதலால், கஞ்சி வகைகள் மிகச் சிறந்தவை.
சீரக கஞ்சி, பால் கஞ்சி, சம்பார கஞ்சி என கஞ்சிகள் பல இருப்பினும் சித்த மருத்துவத்தில் சிறப்பாகக் கூறப்பட்டிருப்பது பஞ்சமுட்டி கஞ்சிதான்.
இதன் செய்முறையாவது; துவரம் பருப்பு, சிறுபருப்பு, கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, பச்சரிசி இவற்றை ஒவ்வொரு பிடி எடுத்து தனித்தனியாக சீலையில் (துணியில்) முடிந்து, பாத்திரத்தில் போட்டு, எட்டு மடங்கு நீர் சேர்த்து, அது பாதி அளவாக சுருக்கி உண்ண உடலுக்கு தேவையான அமினோ அமிலங்கள் நிறைந்திருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை அளித்து உடலை காக்கும்.

மழைக்காலத்தில் சூப் வகைகள் ஜீரண மண்டலத்தைத் தூண்டி ரத்த ஓட்டத்தை அதிகமாக்கி நம்மை சுறுசுறுப்பாக இயங்க செய்யும்.
காய்கறி சூப், அசைவ சூப் மற்றும் கீரை சூப் என சூப்களில் மிளகு, சீரகத்தூள் சேர்த்து அருந்துதல் நன்று. குறிப்பாக தூதுவளை சூப், கொள்ளு சூப், பிரண்டை சூப், மூக்கிரட்டை சூப் போன்றவை சளி, இருமல், கை, கால் குடைச்சல், தொண்டை, நுரையீரல் சார்ந்த பிரச்னைகளை நீக்கும்.
பெருங்காய பொடி, பூண்டு பொடி, பருப்பு பொடி, கருவேப்பிலை பொடி, மிளகு குழம்பு, கொள்ளு ரசம், பிரண்டை துவையல், முள் முருங்கை அடை, முடக்கற்றான் தோசை, புளிச்சக்கீரைக் கடையல், கருணைக்கிழங்கு பொரியல், சுண்டை வற்றல் குழம்பு, தினை உருண்டை, எள்ளுருண்டை, கேழ்வரகு , முருங்கை அடை என ஜீரணத்திற்கு உகந்த உணவுகளை உண்ணலாம்.

ஆப்பிள், சாத்துக்குடி, மாதுளை, ஆரஞ்சு, பேரிக்காய், இலந்தை, சம்பு நாவல், பப்பாளி, பிளம்ஸ், பேரிக்காய், பெர்ரி வகைகள் மட்டும் எடுத்துக் கொள்ளலாம். இவையும் மழை காலத்திற்கான நோய் எதிர்ப்பு சக்தியினை அளித்து உடலை பாதுகாக்கும்.
தயிர், மந்தமான உணவுகள், கிழங்கு வகைகள், காராமணி, மொச்சை, கீரை வகைகள், மா,பலா, வாழை, தர்பூசணி, முலாம்பழம், சீதாப்பழம், வெண்பூசணி, புடலங்காய், காலிஃப்ளவர், கோஸ், காளான், மீன் மற்றும் கடல் உணவுகள் போன்றவற்றை நீக்க வேண்டும். பச்சையான உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.
குளிர்பானங்கள், பழைய, மீந்து போன, ஆறிப்போன உணவுகள், குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்பட்ட உணவுகள், துரித உணவுகள், வறுத்த உணவுகள், சுகாதாரமற்ற முறையில் தயாரித்த உணவுகள் தவிர்க்கவும்.
காலையில் சுக்கு மல்லி காபி, ஆவியில் வேகவைத்த சிற்றுண்டி, பகலில் சம்பா அரிசி சாதம், இளம் பச்சை காய்கறியில் செய்த பொரியல், கூட்டு, தாளிதம் செய்த மோர், மிளகு ரசம், முட்டையின் வெண்கரு, வெள்ளாடு, காடை, கருங்கோழி போன்ற மாமிசங்கள், முளைக்கட்டிய தானியங்கள், சூப் வகைகள், இரவில் தெவிட்டாத தேன் அல்லது மஞ்சள் கலந்த பால் போன்றவற்றை சேர்த்துக் கொள்ளலாம்.
மேற்கூறிய உணவு முறைகளை சரிவர கடை பிடித்தால் வாந்தி, காமாலை, அஜீரணம், டைபாய்டு, மலேரியா, சளி, காய்ச்சல், நுரையீரல் நோய்கள் போன்ற மழைக்கால நோய்கள் வராமல் தடுத்துக் கொள்ளலாம்’’ என்கிறார் மருத்துவர் ஆ.சங்கீதா.