உயர்கோபுர மின் விளக்கால் ஒடிசா கிரிக்கெட் வாரியத்துக்கு புதிய சிக்கல்! ஏன்?
மாஜி அமைச்சர் மகன் விமானத்தில் பேங்காக் கடத்தப்பட்டாரா? - போலீஸ் உத்தரவால் புனே திரும்பிய விமானம்!
மகாராஷ்டிராவில் துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏ-வுமான தானாஜி சாவந்த் மகன் ரிஷிராஜ் சாவந்த் நேற்று மாலை புனே விமான நிலையத்தில் மர்ம நபர்கள் சிலரால் கடத்தப்பட்டதாக போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம போன் அழைப்பு வந்தது. அந்த போன் அழைப்பை தொடர்ந்து புனே முழுக்க போலீஸார் உஷார் படுத்தப்பட்டனர். புனே சின்காட் போலீஸார் இது தொடர்பாக கடத்தல் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். முன்னாள் அமைச்சர் தானாஜி சாவந்த்தும் உடனே போலீஸ் கமிஷனரை சந்தித்து இது குறித்து பேசினார். ஆனால் தனது மகன் கடத்தப்பட்டிருக்க வாய்ப்பு இல்லை என்றும், நண்பர்களுடன் சென்று இருக்கலாம். அவன் அதிருப்தியில் புறப்பட்டு சென்றான் எனக் கூறினார். பின்னர், அவர்கள் விமானத்தில் புறப்பட்டுச் சென்று தெரியவந்துள்ளது. எங்கு சென்றனர் என்பது குறித்த தகவலை போலீஸார் சேகரித்து வருகின்றனர்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-10/rcfdluix/tanaji-sawant-son-2025-02-37053fcc7ddaaf536ec01fd89815498d-3x2.webp)
`எங்களிடம் சொல்லாமல் சென்றுவிட்டார் என்பதுதான் எங்களது கவலை' என்று தானாஜி சாவந்த் தெரிவித்தார். ரிஷிராஜ் விமான நிலையத்தில் இருந்து கடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. அதேசமயம் தனியார் விமானத்தில் ரிஷிராஜ் நண்பர்களுடன் புறப்பட்டுச் சென்றதாகவும் கூறப்படுகிறது. அவர் நண்பர்களுடன் சென்றாரா அல்லது விமானத்தில் எங்காவது கடத்திச் செல்லப்பட்டாரா என்று தெரியவில்லை. அவர்கள் விமானத்தில் எங்கு சென்றனர் என்பது குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.
பட்டப்பகலில் முன்னாள் அமைச்சர் மகன் கடத்தப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது குறித்து புனே போலீஸ் கமிஷனர் ரஞ்சன் குமார் கூறுகையில், '' எங்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கடத்தல் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வழக்கு குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது'' என்றார். இதற்கிடையே ரிஷிராஜ் சென்ற விமானம் எங்கு செல்கிறது என்பதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அந்த விமானம் தாய்லாந்தில் உள்ள பேங்காக்கிற்கு சென்று கொண்டிருந்தது. அந்த விமானத்தின் பைலட்டை தொடர்பு கொண்ட போலீஸார் விமானத்தை புனே திருப்பும்படி கேட்டுக்கொண்டனர். இதையடுத்து விமானம் இரவு 9 மணிக்கு புனே திரும்பியது.
இச்சம்பவத்தால் நேற்று பிற்பகல் 4 மணியில் இருந்து இரவு 9 மணி வரை பதற்றம் நிலவியது. ரிஷிராஜ் சாவந்த் தனது குடும்பத்திற்கு சொந்தமான ஜெ.எஸ்.பி.எம் கல்வி நிறுவனங்களை நிர்வகித்து வருகிறார். ரிஷ்ராஜ் சாவந்த்துடன் விமானத்தில் இரண்டு பேர் சென்றனர். விமானத்தில் இருந்து இறங்கியவுடன் அவர்களிடம் போலீஸார் விசாரித்த பிறகு வீட்டிற்குச் செல்ல அனுமதித்தனர்.