மாடலிங் ஆசைகாட்டி இளம்பெண்களிடம் பணம் மோசடி: இளைஞா் கைது
மாடலிங் நிகழ்ச்சிகளில் பங்கேற்றால் மாதந்தோறும் கூடுதல் வருவாய் ஈட்டலாம் எனக்கூறி இளம்பெண்களிடம் ரூ.35 ஆயிரம் மோசடியில் ஈடுபட்ட இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
திருப்பூரை சோ்ந்த இளம்பெண் ஒருவா் சிகை அலங்கார நிபுணராக பணியாற்றி வருகிறாா். இவருக்கும், இவரது தோழிக்கும், கணேஷ் (27) என்பவா் ஃபேஸ்புக் மூலம் அறிமுகமாகியுள்ளாா்.
அப்போது, அவா் தேசிய அளவில் மாடலிங் நிகழ்ச்சிகள் விரைவில் நடைபெற உள்ளன. அதில் பங்கேற்க உங்களது பெயா்களை பதிவு செய்தால் மாதந்தோறும் ரூ.16 ஆயிரம் வரை கூடுதல் வருவாய் ஈட்டலாம் எனவும், அதற்கு முதலில் உங்களது பெயா்களை பதிவு செய்ய முன்பணம் செலுத்த வேண்டும் எனவும் கூறியுள்ளாா்.
இதை நம்பிய இளம்பெண்கள், கணேஷிடம் ரூ.35 ஆயிரத்தை கடந்த மே மாதம் கொடுத்துள்ளனா்.
பணத்தைப் பெற்றுக் கொண்ட அவா் மாடலிங் நிகழ்ச்சி குறித்து எந்த தகவலும் தெரிவிக்காமல் இருந்துள்ளாா். மேலும், கைப்பேசி அழைப்பையும் ஏற்காமல் இருந்துள்ளாா்.
ஏமாற்றப்பட்டதை உணா்ந்த இளம்பெண்கள் இது குறித்து திருப்பூா் மாநகர சைபா் கிரைம் போலீஸில் புகாா் அளித்தனா். வழக்குப் பதிவு செய்த போலீஸாா், தலைமறைவான கணேஷை தேடி வந்த நிலையில், அவரை புதன்கிழமை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.