`மாட்டுப் பொங்கலை நம்பித்தான் எங்க பானையில சோறு' - நெட்டி மாலையும்... நாரணமங்கல மக்கள் வாழ்வும்!
தமிழர்களின் பாரம்பர்யத்தை வெளிப்படுத்த பல பண்டிகைகள் இருந்தாலும், தை திருநாளன்று விவசாயிகளுக்குப் பெரிதும் உதவும் கால்நடைகளை போற்றும் விழாவாகப் பார்க்கப்படுவது மாட்டுப் பொங்கல். அந்நாளன்று உழவர் குடிமக்கள் வளர்த்து வரும் தங்களது கால்நடைகளை குளிப்பாட்டி மாடுகளின் கொம்புகளில் வண்ணங்கள் தீட்டி கொண்டாடி மகிழ்வர். இதனோடு மட்டுமல்லாமல் அவர்களின் மரபோடு ஒன்றி வாழ்ந்த நெட்டி மாலை என்னும் ஒரு வகை மாலையை கால்நடைகளின் கழுத்தில் கட்டி வருவது, ஒரு ஐதிகமாகப் பார்க்கப்பட்டு வந்தது. ஆனால் நெகிழி பயன்பாடு வெகுவாக காலூன்றிய பிறகு, இந்த நெட்டி மாலை பயன்பாடு குறைய தொடங்கியது. இருப்பினும் இந்த நெட்டி மாலை தொழிலை ஒரு கிராமமே பாரம்பர்யமாகச் செய்து வரும் செய்தி அறிந்து அப்பகுதியைப் பார்வையிட்டோம்.
திருவாரூர் மாவட்டம், நாரணமங்கலம் ஊரினுள் சென்றபோது அவர்களின் குடிசைகளுக்கு முன்னால் வண்ண வண்ண கலர்களில் நெட்டி மாலைகளை சாயம் இட்டு காயவைத்துக் கொண்டிருந்தனர். அந்த குடிசை தொழிலாளர்களிடம் இது குறித்து வினவினோம்...
இத்தொழில் குறித்து சதீஷ் என்பவர் நம்மோடு பேசினார். ``இந்த வேலைக்கு முதலே குளம், குட்டையில வளர்ற நெட்டி தாவரம் தான். இந்த நெட்டிக்காக திருவாரூர் மாவட்டத்தையே ஒரு அலசு அலசுவோம். பொங்கலுக்கு ஒரு நாலு மாசத்துக்கு முன்னாடி இதுக்கான வேலையை தொடங்கிடுவோம். தேடி புடிச்சு கொண்டுட்டு வார நெட்டிய காய விடாம, அத பக்குவமா மேல்பட்டையை சீவி காய வைப்போம். பிறவு அத ஒவ்வொரு வடிவமா கத்தியால சீவுவோம். நெட்டி மாலையை பொறுத்தவரை ஆட்டுக்குட்டிக்கு கட்டுறத காசுமால'ன்னும் மாட்டுக்கு கட்டுறது ரெட்டசரம், கண்ட மால'ன்னும் சொல்லுவோம். காசி மாலையை வெறுமனே அப்படி அப்படியே சீவி சாயத்துல நினைச்சு காய வச்சுருவோம்.
செய்ற மால தான் கொஞ்சம் வேல பிடிக்கும் நெட்டிய கண்டம் கண்டமா வெட்டி திருத்துறைப்பூண்டி முருகன் கடையில வாங்கிட்டு வர்ற பவுடர் சாயத்துல நினச்சி காய வைப்போம். காய வச்ச நெட்டி கண்டத்தை தாழை மர நாருல கோப்போம். இந்த தாழ மர நாருக்குத்தான் அவ்வளவு டிமாண்ட். இந்த நாருக்காக வேதாரண்யம், கோடியாக்கரை, காமேஸ்வரம் ஊருக்கெல்லாம் போயி வெட்டி எடுத்துட்டு வருவோம். வெட்டி எடுத்தாந்த தாழ கத்தய நெட்டிக்கி கீழே குஞ்சான் கட்டி முடிக்கிறத விட நெட்டி வேலை முடிஞ்சது. முடிஞ்ச கையோட திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, முத்துப்பேட்டை, கும்பகோணம், இந்த சுத்துவட்டார ஊருக்குப் போயி மொத்த வியாபாரிங்க கிட்ட வித்துடுவோம். எங்கள தாண்டி எங்க வீட்ல உள்ள பொண்டுகதான் இந்த நெட்டிக்கு அழகு கூட்டுறதே!" என்று கூறினார்.
இதை தொடர்ந்து ரவிச்சந்திரன் என்பவர் நம்மோடு பேசினார். ``இந்த நாரணமங்கலம் ஊர்ல உள்ள 120 குடும்பத்துல எண்ணி பத்து குடும்பம் மட்டும்தான் இந்த தொழிலை பண்றது இல்ல. மத்த எல்லா வீட்டு சனங்களும் குடும்பம் குடும்பமா இந்த குடிச தொழில பண்ணிட்டு வராங்க. நெட்டி மாலையை ஆட்டு மாட்டோட கழுத்துல கட்டுறப்போ அதை திங்கிற ஆடு மாடுங்க வயித்துல புழு பூச்சி வராம இருக்கும். எப்போ சவுதால் மாலை வந்துச்சோ அப்போ இந்த நெட்டி மாலைக்கு மவுசு குறைஞ்சிடுச்சி. 'நெட்டி வேலையை வெட்டி வேலன்னு எம் முப்பாட்டன் சொல்லுவான்'. ஏனா இந்த நெட்டி தாவரத்துக்காக திருத்துறைப்பூண்டி, கோட்டூர், தம்பிக்கோட்டை, முத்துப்பேட்டை, களப்பாளு'ன்னு பல நெட்டு சுத்த வேண்டியிருக்கும்.
நெட்டிய அடையாளம் கண்டு தண்ணில இறங்குறப்போ ஊரோட தலையாரி மோலாசு (சண்டைபிடித்தல்) பண்றதும், தண்ணில இறங்குறப்போ பாம்பு தேளுங்கள்ட்ட கடிபடுறதும், களைக்கொல்லி பயன்பாட்டுனால வருஷா வருஷம் நெட்டி தாவரத்துக்கு தட்டுப்பாடு வாரதுமா பெரும் பின்னடைவா இருக்கு. இந்த நெட்டி எடுக்க போக முடியாதவங்க ஒரு கட்டு 600 னு வெலைக்கி வாங்குவாங்க.
இதுக்கு போடுற சாயம் ஒரு கிலோ 3000. அப்படி பாத்தா 10 கிராம் முப்பது ரூபா. ஒரு முழு மாலை செய்ய மூணு நாலு நாள் புடிக்கும். இதுக்கு அப்புறம் வியாபாரிங்க நட்டத்துக்கு பாதியா இதை வாங்கிட்டு போவாங்க இப்ப தெரியுதா என் முப்பாட்டனோட வாக்கு!" என்று அவர் கூறினார்.
தங்களைப் போன்று குடிசை தொழில் செய்யும் விளிம்பு நிலை மக்களுக்கு, அரசாங்கம் சிறப்பு கவனம் எடுத்து தங்கள் வாழ்வை மேம்படுத்த முன்வர வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர்.