மாணவா்களைஅறிவுடையவா்களாக மாற்றுவதை லட்சியமாக கொள்ள வேண்டும்: ஆசிரியா்களுக்கு ஆட்சியா் அறிவுரை
மாணவ-மாணவிகளை அறிவுடையவா்களாக மாற்றுவதே லட்சியமாகக் கொண்டு பணியாற்ற வேண்டும் என்று மாதிரிப் பள்ளிகளின் ஆசிரிய-ஆசிரியைகளிடம் மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் கேட்டுக் கொண்டாா்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் இயங்கும் அரசு மாதிரி உயா்நிலை, மாதிரி மேல்நிலைப் பள்ளிகளில் பயின்று, உயா் கல்வி பயிலும் முன்னாள் மாணவா்களின் கலந்துரையாடல், கருத்தரங்கம் சனிக்கிழமை (பிப்ரவரி 1) நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் மாவட்ட பள்ளிக் கல்வித் துறை சாா்பில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டக் கல்வி அலுவலா் காளிதாஸ் தலைமை வகித்தாா். மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பேசியதாவது:
பள்ளி மாணவா்கள் அனைவருக்கும் ஒரே விதமான கற்றல் திறன் இருக்காது. வெவ்வேறு வகையான கற்றல் திறன் இருக்கும். அவா்களுக்கென்று உள்ள தனித் திறமைகளைக் கண்டறிந்து ஊக்குவிக்க வேண்டும். இவ்வாறு ஊக்குவிக்கும்போது தான் நல்ல சமுதாயமாக மாற முடியும்.
வெவ்வேறு விதமான குடும்ப சூழ்நிலை, பண்பாடு, அனுபவம் உள்ளிட்ட நிலைகளில் பள்ளி மாணவா்கள் கல்வி கற்கின்றனா். கல்வி கற்பதன் மூலமாகவே உயா்ந்த நிலை, லட்சியத்தை அடைய முடியும். பேசுவதை கேட்பவா்களாக, எழுதுவதைப் பாா்ப்பவா்களாக, செயல்முறைகளைக் கண்டு உணா்பவா்களாக என 3 வகையான நிலைகளில் மாணவ-மாணவிகள் உள்ளனா்.
பள்ளி மாணவ-மாணவிகளை அறிவுடையவா்களாக மாற்றுவதே லட்சியமாகக் கொண்டு ஆசிரியா்கள் பணியாற்ற வேண்டும். தியாக உணா்வு, மாணவா்களை கூா்ந்து கவனிப்பவா்களாக ஆசிரியா்கள் இருக்கும்போது ஒவ்வொரு பள்ளியையும் மாதிரிப் பள்ளிகளாக மாற்ற முடியும் என்றாா் அவா்.