மாணவி வன்கொடுமை புகார்: திமுக முன்னாள் நிர்வாகி தெய்வச்செயலுக்கு முன்ஜாமீன் கிடைத்தது எப்படி?
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில், தி.மு.க இளைஞரணி முன்னாள் நிர்வாகி தெய்வச்செயல் மீது கல்லூரி மாணவி அளித்த வன்கொடுமை விவகாரத்தை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது தேசிய மகளிர் ஆணையம். பாரபட்சமற்ற மற்றும் வெளிப்படையான விசாரணையை வலியுறுத்தி தமிழக டி.ஜி.பி-க்கும் கடிதம் அனுப்பப்பட்டிருக்கிறது. மேலும், இந்த வழக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து 3 நாள்களுக்குள் எஃப்.ஐ.ஆர் நகலுடன் விரிவான அறிக்கை சமர்பிக்கவும் ஆணையம் கோரியுள்ளது.
அ.தி.மு.க-வினர் ஆர்ப்பாட்டம்
இதற்கிடையே, குற்றச்சாட்டுக்குள்ளான தெய்வச்செயல் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக்கூறி தி.மு.க அரசையும், காவல்துறையையும் கண்டித்து அரக்கோணத்தில் நேற்று காலை அ.தி.மு.க-வினர் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.
மாணவி தரப்பில் முதலில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில், கடந்த 10-ம் தேதியன்றே அரக்கோணம் மகளிர் காவல் நிலையப் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். ஆனாலும், கடந்த 10 நாள்களாக தெய்வச்செயலை கைது செய்வதற்கான எந்தவொரு நடவடிக்கையையும் போலீஸார் மேற்கொள்ளவில்லை என்கிற குற்றச்சாட்டினை மாணவி கூறிவந்தார்.

அதோடு, ``ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறையும் என்னை அசிங்கப்படுத்துற மாதிரி, தவறான பத்திரிக்கைச் செய்தியை வெளியிட்டிருக்காங்க. மே 9-ம் தேதி கொடுத்த கம்ப்ளெயின்ட்டுக்கு, மறுநாள் தெய்வச்செயல் மேல எஃப்.ஐ.ஆர் போட்டிருக்காங்க. ஆனா வன்கொடுமை, கொலை மாதிரியான எந்தவொரு கடுமையான பிரிவுகளையும் சேர்க்கலை. ஆபாச வார்த்தைகளால திட்டுதல், முந்தைய திருமணத்தை மறைத்தல்னு சாதாரணமாக நாலு பிரிவுகள்ல எஃப்.ஐ.ஆர் போட்டிருக்காங்க.
`ஆளுங்கட்சியில இருக்குறதால...’
கடுமையான பிரிவுகள்ல எஃப்.ஐ.ஆர் போட்டு அவனைக் கைது பண்ணனும். அவனால பாதிக்கப்பட்ட மற்ற பெண்களையும் காப்பாத்தணும். இவனால என் வாழ்க்கையே போயிடுச்சு. எல்லா ஆதாரங்களையும் கையில வெச்சிருக்கேன். ஆனாலும், தெய்வா ஆளுங்கட்சியில இருக்குறதால, போலீஸ் நடவடிக்கை எடுக்காம, என் பக்கமே தவறு இருக்கிற மாதிரி சித்திரிக்கிறாங்க’’ என்றார் கண்ணீருடன்.
இந்த நிலையில், அ.தி.மு.க-வின் தூண்டுதலின்பேரில் தங்களுக்கெதிராக புகாரளிக்கப்பட்டிருப்பதாகக் கூறி தெய்வச்செயல் மற்றும் அவரின் முதல் மனைவி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், ``புகாரளித்த இளம் பெண்ணுக்கு ஏற்கெனவே திருமணமாகிவிட்டது. அந்த பெண்ணிடம் இருந்து விவகாரத்து கோரி அவரின் கணவர் குடும்ப நல நீதிமன்றத்தில் மனு செய்திருக்கிறார். இன்னும் அவர்கள் இருவருக்கும் இடையே விவகாரத்து கிடைக்கவில்லை.

ஆட்சேபனை தெரிவிக்காத அரசு வழக்கறிஞர்
எனக்கும் அந்த இளம்பெண்ணுக்கும் (மாணவி) கடந்த ஜனவரி மாதம் 31-ம் தேதி திருமணம் நடைபெற்றது உண்மைதான். எனக்கெதிரான புகார் குறித்து முறையாக விசாரணை நடத்த வேண்டும். அப்போதுதான் எனக்கெதிரான குற்றச்சாட்டில் உண்மை இருக்கிறதா, இல்லையா என்பது தெரியவரும். என்னை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க தேவையில்ல என்பதால் முன் ஜாமீன் வழங்க உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.
அப்போது, புகாரளித்த மாணவி சார்பில் ஆஜரான வழக்கறிஞர், தெய்வச்செயலுக்கு முன் ஜாமீன் வழங்கக் கூடாது என்று வாதிட்டார். எனினும், அரசு வழக்கறிஞர் தரப்பிலும் இந்த வழக்கில் முன் ஜாமீன் வழங்குவதற்கு எந்த ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை. இதனால், தெய்வச்செயல், அவரின் முதல் மனைவி இருவருக்கும் முன்ஜாமீன் வழங்கப்பட்டது.