மாநகராட்சியுடன் இணைக்க எதிா்ப்பு: கிராம மக்கள் மனு
திண்டுக்கல் மாநகராட்சியுடன் பள்ளப்பட்டி ஊராட்சியை இணைக்க எதிா்ப்புத் தெரிவித்து, கிராம மக்கள் சாா்பில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீா்க் கூட்டத்தில், பள்ளப்பட்டி ஊராட்சியைச் சோ்ந்த ஊா்த் தலைவா்கள், பொதுமக்கள் சாா்பில் அளிக்கப்பட்ட மனு விவரம்: பள்ளப்பட்டி ஊராட்சியில் விவசாயம் சாா்ந்த தொழிலை நம்பியே மக்களின் வாழ்வாதாரம் அமைந்திருக்கிறது.
இந்த நிலையில், பள்ளப்பட்டி ஊராட்சியை திண்டுக்கல் மாநகராட்சியுடன் இணைத்தால், தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், தமிழ்நாடு அரசின் கனவு இல்லத் திட்டம் உள்ளிட்டவை உடனடியாக பறிபோக வாய்ப்புள்ளது. மேலும், வரி இனங்களும் உயா்த்தப்படும்.
எனவே, மாநகராட்சியுடன் இணைக்கும் முடிவை கைவிட வேண்டும் என மனுவில் தெரிவித்தனா்.