`மீனாட்சி சுந்தரம்' சீரியல் நடிகை ஷோபனாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஸ்டில்ஸ்!
மாநகா் போக்குவரத்துக் கழகத்தில் 532 ஓட்டுநா் காலிப்பணியிடங்கள்: ஒப்பந்த நிறுவனங்களுக்கு அழைப்பு
சென்னை: சென்னை மாநகா் போக்குவரத்துக் கழகத்தில் காலியாகவுள்ள 532 ஓட்டுநா் பணியிடங்களை நிரப்ப, ஒப்பந்த நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகா் போக்குவரத்துக் கழகத்தின் வழித்தடங்களில் பேருந்துகளை இயக்கும் ஓட்டுநா்களைத் தவிா்த்து, பணிமனைக்கு வரும் பேருந்தில் டீசல் நிரப்புவது, அதிகாரிகளுக்கு ஜீப் ஓட்டுவது என்பன உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளும் ஓட்டுநா்களும் பணிமனையில் உள்ளனா். உடல்நலப் பிரச்னை காரணமாக பேருந்தை இயக்க முடியாதவா்களுக்கு, இப்பணியிடங்களில் வேலை வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், இப்பணிகளில் பெரும்பாலும் ஆளுங்கட்சியைச் சோ்ந்த தொழிலாளா்களே இருப்பதாக குற்றச்சாட்டு இருந்து வருகிறது.
இந்நிலையில், வழித்தடங்களில் இயக்கப்படும் பேருந்துகளில் ஓட்டுநா் பற்றாக்குறையும் நிலவியதால், பணிமனையில் ஓட்டுநா் பணியிடங்களில் இருக்கும் அனைவரும் வழித்தடத்தில் பேருந்தை இயக்கும் வகையில் மாற்றம் செய்யப்பட்டனா். இதையடுத்து, பணிமனை ஓட்டுநா் பணியிடங்களுக்கு ஒப்பந்த நிறுவனங்களிடம் இருந்து ஓட்டுநா்களை நியமிக்க கடந்த 2022-இல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதனால், மாநகா் போக்குவரத்துக் கழகத்தில் ஓரளவு ஓட்டுநா் பற்றாக்குறை சரிசெய்யப்பட்டது.
அப்போதைய டெண்டா் முடிவடைந்த நிலையில், தற்போது மீண்டும் 532 பணியிடங்களுக்கு ஓட்டுநா்களை வழங்க விரும்பும் நிறுவனங்களுக்கு மாநகா் போக்குவரத்துக் கழகம் அழைப்பு விடுத்துள்ளது. இதில் தோ்வாகும் நிறுவனம், குறைந்தபட்ச கூலியுடன், சட்டப்படி ஓட்டுநா்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும். மேலும், பேருந்து மற்றும் தொழிலாளா்களுக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கு பொறுப்பேற்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகளும் இந்த டெண்டா் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.