Travel: சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் சிவப்பு கடற்கரை - ஏன் நிச்சயம் பார்க்க வேண்டு...
ஜிபிஎஸ் முறையில் சுங்கக் கட்டணம் வசூலிப்பா? - மத்திய அரசு விளக்கம்!
மே 1 முதல் ஜிபிஎஸ் முறையில் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படும் என்று பரவும் தகவல் உண்மையல்ல என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் காத்திருப்பதைத் தவிர்க்கும் பொருட்டு, இனி செயற்கோள் மூலமாக ஜிபிஎஸ் முறையில் வாகனங்கள் செல்லும் தொலைவைப் பொருத்து சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படும் என்று தகவல் பரவியது.
இந்நிலையில் இந்தத் தகவல் உண்மையல்ல என்றும் அதுதொடர்பாக மத்திய அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், 'சுங்கச்சாவடிகளில் மே 1 முதல் ஃபாஸ்டேக் கட்டண முறைக்குப் பதிலாக ஜிபிஎஸ் முறையில் கட்டணம் வசூலிக்கப்படும் என்று பரவி வரும் தகவல் உண்மையல்ல. சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகமோ அல்லது இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையமோ அத்தகைய எந்த முடிவும் எடுக்கவில்லை என்பதை தெளிவுபடுத்துகிறோம். பொதுமக்கள், ஊடகங்களில் வரும் தவறான தகவல்களை நம்ப வேண்டாம். தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் உள்ள தற்போதைய ஃபாஸ்டேக் கட்டண முறையே தொடரும்' என்று கூறியுள்ளது.
அதேநேரத்தில் சுங்கச்சாவடிகள் வழியாக வாகனங்கள் தடையின்றி இயக்கவும் பயண நேரத்தைக் குறைக்கவும் குறிப்பாக சுங்கச்சாவடிகளில் காத்திருப்பதைக் குறைக்க விரைவாக கட்டணம் பெறும் ஏஎன்பிஆர் - ஃபாஸ்டேக் கட்டண வசூலிப்பு முறை செயல்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
வாகனத்தின் நம்பர் பிளேட்டில் உள்ள எண், கேமரா மூலமாக பெறப்பட்டு அத்துடன் பழைய ஃபாஸ்டேக் முறையுடன் ரேடியோ-அதிர்வெண் அடையாளத்தை (RFID) பயன்படுத்தி விரைந்து கட்டணம் பெறும் முறை கொண்டு வரப்படும். இதனால் வாகனங்கள் நிற்க வேண்டிய அவசியமிருக்காது. ஒரு சில சுங்கச்சாவடிகளில் சோதனை முறையில் பயன்பாட்டில் உள்ளது என்றும் பயனர்களின் கருத்துகளுக்கு ஏற்ப நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் கொண்டு வரப்படும் என்றும் மத்திய அரசு கூறியுள்ளது.