``மாநில அந்தஸ்து தொடர்பான 13 தீர்மானங்கள் டெல்லிக்கே சென்றதில்லை”- புதுச்சேரி சபாநாயகர் சொல்வதென்ன ?
புதுச்சேரி சட்டசபையில் நேற்று அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் முடிந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் செல்வம், ``புதுச்சேரி சட்டசபை கூட்டத்தொடரை 13 நாட்கள் நடத்துவதற்கு முடிவு செய்திருக்கிறோம். 12-ம் தேதி காலை 9.30 மணிக்கு நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதல்வர் ரங்கசாமி பட்ஜெட் தாக்கல் செய்ய இருக்கிறார். புதுச்சேரியில் ரூ.13,600/- கோடிக்கு பட்ஜெட் தாக்கல் செய்வதற்கான கோப்புக்கு மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. காகிதமில்லா சட்டசபை நிகழ்வுகளை இம்முறை தொடங்கியிருக்கிறோம்.

பட்ஜெட் தாக்கல் செய்யும் நாளில் எம்.எல்.ஏ-க்களுக்கு பட்ஜெட் புத்தகம் வழங்கப்படும். அதைத் தொடர்ந்து எம்.எல்.ஏ-க்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். புதிய சட்டமன்ற வளாகம் தட்டாஞ்சாவடியில் 3.45 ஏக்கரில் கட்டப்பட இருக்கிறது. இதற்காக திருத்தி அமைக்கப்பட்ட திட்ட மதிப்பீடு ரூ.657 கோடி என நிர்ணயிக்கப்பட்டு, நிதி அமைச்சகத்தின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. மத்திய, மாநில அரசு திட்டங்கள் மூலம் புதுவை பெஸ்ட் புதுச்சேரியாக மாறும். புதுவை சட்டப்பேரவையில் இதுவரை மாநில அந்தஸ்து தொடர்பாக நிறைவேற்றப்பட்ட 13 தீர்மானங்கள் மத்திய அரசுக்கே அனுப்பப்படவில்லை.
தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைந்த பிறகுதான், 2022-ம் ஆண்டு மாநில அந்தஸ்து தீர்மானம் மத்திய அரசுக்கு முதல்முறையாக அனுப்பப்பட்டது. அதற்கு மத்திய அரசு தற்போதைய நிலையே தொடரும் என தெரிவித்துள்ளது. தீர்மானம் நிறைவேற்றினால் மாநில அந்தஸ்து தந்துவிட வேண்டும் என்பது இல்லை. அதற்காக அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும். டெல்லியில் பிரதமரை சந்திக்க அனுமதி கேட்டிருக்கிறோம். அனுமதி கிடைத்தவுடன் அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள் டெல்லி சென்று பிரதமரை சந்திப்போம். கடந்த காங்கிரஸ் ஆட்சி எப்படி இருந்தது என எல்லோருக்கும் தெரியும்.

மக்களிடம் காங்கிரஸ் கட்சி பொய்யான தகவல்களை கூறி வாக்கு அரசியலை செய்கிறார்கள். ஆனால் மக்கள் இந்த முறை ஏமாற தயாராக இல்லை. புதுச்சேரி நிதி நிலைமைக்கும், மோசமான நிலைக்கும் கடந்த ஒன்றிய காங்கிரஸ் அரசுதான் காரணம். அப்போதிருந்த மத்திய அமைச்சர் சிதம்பரமும், நாராயணசாமியும்தான் புதுச்சேரிக்கு தனிக்கணக்கு துவங்க காரணமாக இருந்தனர். நிதிக் கமிஷனில் புதுச்சேரியை சேர்க்க மத்திய அரசிடம் தீவிரமான முயற்சிகளை மேற்கொள்வோம்” என்றார்.