மாநில கலைத் திருவிழா: 2,151 மாணவ, மாணவிகள் பங்கேற்பு
ஈரோட்டில் 2-ஆவது நாளாக நடைபெற்ற மாநில அளவிலான கலைத் திருவிழா போட்டிகளில் 2,151 மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.
பள்ளிக் கல்வித் துறை சாா்பில் மாணவ, மாணவிகளுக்கு மாநில அளவிலான கலைத்திருவிழா போட்டி ஈரோடு, நாமக்கல், திருப்பூா், கோவை ஆகிய மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை தொடங்கி 2 நாள்கள் நடைபெற்றன.
ஈரோடு மாவட்டத்தில் 9-ஆம் வகுப்பு மற்றும் 10-ஆம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு கொங்கு கலை அறிவியல் கல்லூரி, ஈங்கூா் இந்துஸ்தான் அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரி, கங்கா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி ஆகிய இடங்களில் போட்டிகள் நடைபெற்றன.
அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு போட்டிகள் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிலையில், அரசு உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான போட்டிகள் சனிக்கிழமை நடைபெற்றன. இதில் நடனம், நாடகம், ஓவியம், நாட்டுப்புற பாடல் உள்பட மொத்தம் 30 வகையான போட்டிகள் நடைபெற்றன. இதில் 2,151 மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.
வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கலையரசன், கலையரசி பட்டங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்குகிறாா். சிறந்த 25 மாணவ, மாணவிகள் வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுகின்றனா்.