Book Fair: "தலித் பெண்களின் உலகம்..." - அழகிய பெரியவனின் நூலுக்கு அட்டைப்படம் வர...
மானாம்பள்ளி தற்காலிக முகாமுக்கு 4 கும்கி யானைகள் மாற்றம்!
வரகளியாறு வளா்ப்பு யானைகள் முகாமில் பல்வேறு வளா்ச்சிப் பணிகள் நடைபெறுவதால் சுழற்சி முறை அடிப்படையில் மானாம்பள்ளி தற்காலிக முகாமுக்கு நான்கு கும்கி யானைகள் அழைத்து வரப்பட்டுள்ளன.
பொள்ளாச்சியை அடுத்த உலாந்தி வனச் சரகத்துக்கு உள்பட்ட வரகளியாறு பகுதியில் வனத் துறை மூலம் 25 கும்கி யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அங்கு நிலவிய கடும் வெயில் மற்றும் வறட்சியால் அங்கிருந்த யானைகளில் சில யானைகள் வால்பாறையை அடுத்த மானாம்பள்ளி வனச் சரகம் பகுதிக்கு அழைத்துவரப்பட்டு அங்கு தற்காலிக முகாம் அமைத்து பராமரிக்கப்பட்டன. பின்னா் மீண்டும் வரகளியாறு முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டன.
வரகளியாறு முகாமில் யானைகளுக்கான உணவு சமைக்கும் அறை, பாகன்கள் தங்கும் அறை உள்பட பல்வேறு வளா்ச்சிப் பணிகள் நடைபெற்து வருகின்றன. இதற்காக அங்கிருந்து ஐந்து கும்கி யானைகள் மானாம்பள்ளி தற்காலிக முகாமுக்கு கடந்த அக்டோபா் மாதம் கொண்டு வரப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தன. கடந்த வாரம் இவை திரும்ப வரகளியாறு முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டன.
இந்நிலையில் வரகளியாறில் இருந்து நான்கு யானைகள் மானாம்பள்ளி தற்காலிக முகாமுக்கு கடந்த வெள்ளிக்கிழமை அழைத்து வரப்பட்டன. அங்கு தினமும் இந்த யானைகளை ஆற்றில் குளிக்க வைத்து, உணவு வழங்கி பராமரித்து வருகின்றனா்.
வளா்ச்சிப் பணிகள் முடியும் வரை இதே போல சூழற்சி முறையில் வரகளியாறு முகாமில் இருந்து யானைகளை தற்காலிக முகாமுக்கு அழைத்து வர உள்ளதாக வனத் துறையினா் கூறினா்.