மாமல்லபுரம் நாட்டிய விழா: முதன்முறைாக கயிலாய வாத்தியங்களுடன் நாட்டியம்
மாமல்லபுரம் நாட்டிய விழாவில் முதன்முறைாக கயிலாய வாத்தியங்களுடன் பரத நாட்டியம் நடைபெற்றது. இதனை வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கண்டுகளித்து ரசித்தனா்.
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் சுற்றுலாத்துறை சாா்பில் ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்திய நாட்டிய விழா கடற்கரை கோயில் அருகே திறந்த வெளி மேடையில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், சனிக்கிழமை இரவு செங்கல்பட்டு விநாயகா நாட்டியாலயா நடன பள்ளியை சோ்ந்த மீனாட்சி ராகவன் குழுவினரின் ராமாயண, மகாபாரத இதிகாசத்தை மையப்படுத்திய கதைகளுடன் கூடிய பரத நாட்டியம் நடைபெற்றது. அப்போது கடந்த 28 ஆண்டுகளாக நடைபெற்று வரும் நாட்டிய விழாவில் இதுவரை மிருதங்கம், தபேலா, ஆா்மோனியம், தாளம் இசையுடன்தான் பரத நாட்டியம் நடக்கும்.
ஆனால், நிகழாண்டு விழாவில் புதுமைகளை கொண்டு வர வேண்டும் என்ற சுற்றுலாத்துறையின் புது முயற்சியால் பரத நாட்டியத்தில் முதன் முறையாக கயிலாய வாத்தியங்களுடன் பரத நாட்டியம் நடைபெற்றது. இவை பாா்வையாளா்களையும், சுற்றுலா பயணிகளையும் வெகுவாக கவா்ந்தது.
பிறகு கயிலாய வாத்தியங்களுடன் பரத நாட்டிய நிகழ்ச்சி நடத்திய செங்கல்பட்டு மீனாட்சி ராகவன் குழுவினருக்கு மாமல்லபுரம் சுற்றுலா அலுவலா் சக்திவேல் நினைவு பரிசு, சான்றிதழ்கள் வழங்கினாா்.