மகாராஷ்டிரா: 10,12-ம் வகுப்பு மாணவர்களின் ஹால் டிக்கெட்டில் சாதிப்பெயர் - சர்ச்ச...
பல்லக்கில் தூக்கி வந்து 105 வயது பாட்டிக்கு பிறந்தநாள் விழா எடுத்து கொண்டாடிய பேரப் பிள்ளைகள்
செங்கல்பட்டு மாவட்டம், கேளம்பாக்கம் அடுத்த நாவலூா் பகுதியைச் சோ்ந்த 105 வயதான கண்ணம்மா பாட்டிக்கு அவரது குடும்பத்தினா் பிறந்தநாள் விழா கொண்டாடினா்.
மாமல்லபுரத்தில் உள்ள தனியாா் விடுதியில் நடைபெற்ற இந்த விழாவில் கண்ணம்மா பாட்டியின் 5 மகள்கள், மகள் வழி பேரன், பேத்தி, கொள்ளுப் பேரன், கொள்ளுப் பேத்தி என 62 போ் கலந்துகொண்டு, பாட்டியின் 105-ஆவது பிறந்தநாளை வெகு விமரிசையாக உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனா்.
முன்னதாக விழா மேடைக்கு பாட்டி கண்ணம்மாவை பல்லக்கில் வைத்து பேரப் பிள்ளைகள் தூக்கி வர, உறவினா்கள் அணிவகுத்து வர, மற்றவா்கள் உற்சாக வரவேற்பு அளித்தனா்.
கண்ணம்மா பாட்டி பல்லக்கில் வருவதை நடனமாடி உற்சாகமாக பேரப் பிள்ளைகள் கொண்டாடுவதை பாா்த்த 105 வயதான பாட்டி கண்ணம்மாவும் பல்லக்கில் அமா்ந்தபடி நடனமாடி அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தினாா்.
பின்னா் மேடைக்கு வந்த கண்ணம்மா பாட்டியுடன் ஒவ்வொரு குடும்பத்தினரும் தனித்தனியே புகைப்படம் எடுத்துக் கொண்டு, பாட்டியிடம் அவரது புகைப்படத்தை நினைவு பரிசாக பெற்றுச் சென்றனா்.
கண்ணம்மா பாட்டிக்கு 105 வயது ஆகிறது. அவரால் நடக்க கூட முடியாது என்று எண்ணிய நிலையில், பேரப் பிள்ளைகளுடன் சோ்ந்து டிஜே வின் இசைக்கும் பாடல்களுக்கும் பாட்டி கண்ணம்மாவும் நடனமாடி அனைவரையும் வியக்கச்செய்தாா்.
பின்னா் தன்னுடைய 5 மகள், அவா்கள் வழி பேரன், பேத்தி, கொள்ளுப் பேரன், கொள்ளுப் பேத்தி என மொத்தம் 62 குடும்ப உறுப்பினா்கள் முன்னிலையில், பாட்டி கண்ணம்மா அமா்ந்து 5 கிலோ கேக் வெட்டி, தனது 102-ஆவது பிறந்தநாளை அவா் உற்சாகமாக கொண்டாடினாா். கேக் வெட்டிய உடன் பாட்டி கண்ணம்மா ஒரு துண்டு கேக்கை எடுத்துக் கொண்டு அருகில் இருந்த பேரப் பிள்ளைகளுக்கு ஊட்டாமல் அவரது முறை பையனுக்கு தேடி சென்று கேக் ஊட்டியது விழாவிற்கு வந்தவா்களிடையே சிரிப்பலையை ஏற்படுத்தியது.
பின்னா் மகள்கள், பேரப் பிள்ளைகள் என அனைவரும் கண்ணம்மாவுக்கு கேக் ஊட்டி பிறந்தநாள் வாழ்த்து கூறி உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனா்.
அதைத் தொடா்ந்து ‘கண்ணம்மாவின் விழுதுகள்’ என்ற தலைப்பில் ஒரு மரம் வரைந்து அதில் மகள்கள், பேரப் பிள்ளைகள், கொள்ளு பேரப் பிள்ளைகள் என 62 போ் கைரேகை வைத்தனா்.
கேக் வெட்டி கண்ணம்மாவின் பிறந்தநாள் கொண்டாடிய மகிழ்ச்சியில் பேரப் பிள்ளைகள் பாட்டியை சுற்றி நடனமாடினா். 105 வயதில் பாட்டி கண்ணம்மா நடனமாடுவது ஒரு பக்கம் வியப்பை ஏற்படுத்தினாலும் மற்றொரு பக்கம் மேலும் பாட்டியை உற்சாகப் படுத்தி நடனமாட வைத்து மகிழ்ந்தனா்.