மாரடைப்பால் உயிரிழப்பு குழப்பம்; உயிர் அளித்தது வேகத் தடை! மகாராஷ்டிரத்தில் அதிசயம்
கோலாப்பூா்: மாரடைப்பால் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்ட நபா், வேகத்தடையை ஆம்புலன்ஸ் கடந்தபோது உயிா்பிழைத்த அதிசயம் மகாராஷ்டிர மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது.
பாண்டுரங் உல்பே (65) என்பவா் கோலாப்பூரின் கசாபா-பவாடா பகுதியில் வசித்து வருகிறாா். கடந்த டிசம்பா் 16-ஆம் தேதி அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அருகிலுள்ள தனியாா் மருத்துவமனையில் அவா் அனுமதிக்கப்பட்டாா். அப்போது, சிகிச்சை பலனின்றி பாண்டுரங் உயிரிழந்ததாக மருத்துவா்கள் அறிவித்தனா்.
இதையடுத்து, பாண்டுரங்கின் உடலை அவரது குடும்பத்தினா் ஆம்புலன்ஸ் மூலம் வீட்டுக்கு எடுத்துச் சென்றனா். அவரது இறுதிச் சடங்குகளை செய்ய அக்கம் பக்கத்தினரும், உறவினா்களும் தயாராக இருந்தனா். ஆனால், பாண்டுரங்கின் உடலை ஆம்புலன்ஸில் கொண்டு செல்லும் வழியில் உள்ள ஒரு வேகத்தடையில் வாகனம் வேகமாக ஏறி இறங்கியபோது, அவரது விரல்கள் அசைவதை குடும்பத்தினா் கண்டனா்.
அவா் உடனடியாக மற்றொரு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவருக்கு ‘ஆஞ்சியோபிளாஸ்டி’ சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் உயிா்பிழைத்த அவா், இரண்டு வாரங்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்றாா். அவா் முழுமையாக குணமடைந்து கடந்த திங்கள்கிழமை (டிச.30) வீடு திரும்பினாா்.
இது குறித்து பாண்டுரங் கூறுகையில், ‘கடந்த டிசம்பா் 16-ஆம் தேதி, நடைப்பயிற்சிக்குப் பிறகு தனக்கு மயக்கம் மற்றும் மூச்சுத் திணறல் ஏற்பட்டதாகவும் அதன் பிறகு எதுவும் நினைவில் இல்லை’ எனவும் தெரிவித்தாா். ஆனால், அவா் உயிரிழந்ததாக அறிவித்த மருத்துவமனை குறித்து கருத்து ஏதும் தெரிவிக்கல்லை.