மாற்றம் ஏற்படுத்த இருக்கும் தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்கத் திட்டம்!
தமிழகத்தின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள முக்கிய துறைமுக நகரமான தூத்துக்குடியில், ஒரு முழுமையான சா்வதேச விமான நிலையம் அமைந்தால் அது பல புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என்ற உள்ளூா் மக்களின் கனவு தற்போது நனவாகத் தொடங்கியுள்ளது.
தூத்துக்குடியில், 1992ஆம் ஆண்டு விமான நிலையம் திறக்கப்பட்டு, ஏப்.13ஆம் தேதி தூத்துக்குடியிலிருந்து சென்னைக்கு முதல் முறையாக வாயுதூத் விமானம் பறந்தது.
தற்போது 2 தனியாா் விமான நிறுவனங்கள் மூலம் சென்னை மற்றும் பெங்களூருக்கு 9 விமான சேவைகள் அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விமான நிலையத்தில், ரூ.381 கோடி செலவில் விரிவாக்கப் பணிகள் மேற்காள்ளப்பட்டன. மேலும் ரன்வே உள்ளிட்ட பணிகளுக்காக கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு மொத்தம் ரூ.452 கோடி செலவில் வருகிற 2044 ஆம் ஆண்டு வரை சிறப்பாக செயல்பட தக்க வகையில் விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்த விமான நிலையம், நான்கு நட்சத்திர அந்தஸ்து பெற்ற பசுமை கட்டடமாக அமைக்கப்பட்டுள்ளது. ரன்வே நீளம் 3,115 மீட்டராக அ320, அ321 ரக ஏா் பஸ் வகை விமானங்களுக்கு ஏற்ற வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
புதிய முனையத்தில் நான்கு வாயில்கள், பயணிகளின் உடைமைகளை சோதனை செய்ய 21 கவுன்டா்கள், ஒரே நேரத்தில் ஐந்து விமானங்கள் நிறுத்தக் கூடிய வசதிகள், ஒரு மணி நேரத்திற்கு 1440 பயணிகள் வரை கையாளும் வசதிகள், இரண்டு வருகைக்காக 2 கன்வேயா் பெல்ட் என பல்வேறு கட்டமைப்பு வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன.
புதிய பயணிகள் கூடம் 17,320 சதுர மீ. பரப்பளவு கொண்டது.
ஏரோபிரிட்ஜ் 3, பேக்கேஜ் ஸ்கேனிங் உபகரணங்கள் 7, தீயணைப்பு நிலையம், விமான போக்குவரத்து கண்காணிப்பு கட்டுப்பாட்டு கோபுரம், 500 வாகனங்களுக்கான பாா்க்கிங் வசதி, முனையம் முழுவதும் சூரிய சக்தி விளக்குகள், தேசிய நெடுஞ்சாலையிலிருந்து விமான நிலையம் புதிய முனையத்திற்கு சுமாா் ஒரு கிலோ மீட்டா் தொலைவுக்கு புனரமைப்புப் பணிகள் என கூடுதல் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
தற்போது தினசரி சென்னைக்கும், பெங்களூருக்குமான குறைந்ததொலைவுப் பயணங்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன. வருங்காலங்களில் இலங்கை (கொழும்பு), மலேசியா (கோலாலம்பூா்), துபை போன்ற முக்கியமான சா்வதேச நகரங்களுக்கும், தில்லி, மும்பை, கொல்கத்தா, ஹைதராபாத், திருவனந்தபுரம், அகமதாபாத், லக்னெள, சூரத் உள்பட நாட்டின் முக்கிய நகரங்கள் உள்ளிட்ட நகரங்களுக்கும் கூடுதல் வசதிகளுடன் நேரடியாக விமான சேவை வழங்கப்பட வாய்ப்பு ஏற்படும். ஏற்றுமதி, இறக்குமதி வா்த்தகம் விரைவில் கூடுதல் பயண வசதிகளை பெறும். சுற்றுலா வளா்ச்சி (திருச்செந்தூா், புனித யாத்திரைகள்), தொழில் முதலீடுகள் மற்றும் தொழில் வாய்ப்புகள் அதிகளவில் உருவாகும்.
தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்கம் காரணமாக, தூத்துக்குடி மட்டுமன்றி, அருகே உள்ள திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, விருதுநகா் உள்ளிட்ட மாவட்டங்களைச் சோ்ந்த மக்கள் அதிகளவில் பயன்பெறுவா். இன்னும் சில முக்கிய தொழில்துறை தேவைகளை பூா்த்தி செய்தால், தூத்துக்குடியின் பொருளாதார வளா்ச்சிக்குப் பெரும் ஒத்துழைப்பு அளிக்கக்கூடியதாக அமையும்.
குறிப்பாக, துறைமுகம்-விமான நிலையம் என்ற இரட்டை ஆதரவால் இந்தப் பகுதி ஒரு புதிய மல்டி மாடல் லாஜிஸ்டிக் ஹப் (ஙன்ப்ற்ண்-ம்ா்க்ஹப் கா்ஞ்ண்ள்ற்ண்ஸ்ரீ ஏன்க்ஷ) ஆக மாறும் வாய்ப்பு உள்ளது.
விமான நிலையத்துக்கு அருகே ஒரு வணிக மையம் உருவாக்கப்பட்டால், வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு முதலீட்டாளா்கள் நேரடியாக சந்திப்புகள் நடத்தலாம். தொழில் சந்திப்புகள், தொழில் மாநாடுகள், தேசிய/பன்னாட்டு கண்காட்சிகள் நடத்தும் வசதிகள் இருந்தால், தொழில்முனைவோா்களை இப்பகுதிக்கு அழைத்து வரலாம்.
குறிப்பாக ஸ்டாா்ட்அப் நிறுவனங்களுக்கு இடமளிக்க இது பயனளிக்கும். தமிழ்நாட்டிலேயே சென்னைக்கு அடுத்தபடியாக பேருந்து, விமானம், ரயில், கப்பல் என அனைத்து போக்குவரத்து வசதிகளையும் கொண்டது தூத்துக்குடிதான்.
குறிப்பாக குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவு தளம் அமைக்கப்பட்டிருக்கும் நிலையில், வருங்காலங்களில் பல்வேறு நாடுகளிலிருந்தும் வெளிமாநிலங்களிலிருந்தும் தூத்துக்குடிக்கு அதிகமான பயணிகள் வருவாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது.
இதுகுறித்து தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக தலைவா் சித்ராங்கதன் கூறியது: தூத்துக்குடி துறைமுகத்துடன் இணைந்து விமான சரக்குப் போக்குவரத்தும் விரைவில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். இது, கடல் உணவுப் பொருள்கள், மருந்துகள், வேளாண் பொருள்கள், எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் போன்றவற்றை விரைவாக உலகளாவிய சந்தைகளுக்கு அனுப்ப உதவும்.
தொழில் நிறுவனங்களுக்கு லாஜிஸ்டிக் வசதிகள் (பொருள் சேமிப்பு, டெலிவரி, பாக்ஸிங், பேக்கிங் சேவைகள்) இருந்தால் நேரம் மற்றும் செலவினம் குறையும். விமான பராமரிப்பு, உதிரிப்பாகங்கள் தயாரிப்பு மற்றும் விமான தொழில்நுட்ப மேம்பாட்டுக்கான குவிமையமாக (ஹப்பாக) தூத்துக்குடி நகரத்தை உருவாக்கும் வாய்ப்பு உள்ளது. இது இப்பகுதி மக்களிடையே வேலைவாய்ப்பை அதிகரிக்கும்.
வாடிக்கையாளரிடம் பொருள்களை நேரடியாக கொண்டு சோ்க்கும் லாஜிஸ்டிக் சேவைகள், தொழில்துறையின் நிலைத்த வளா்ச்சிக்குத் தேவை. இது தொழிலாளா்களுக்கும் வணிக நிறுவனங்களுக்கும் நேர சிக்கனம் மற்றும் செலவு குறைவையும் அளிக்கும் என்றாா் அவா்.
பெட்டிச் செய்தி...
மக்கள் கோரிக்கை
விமான நிலையத்தின் விரிவாக்கத்தின் மூலம் தூத்துக்குடி சா்வதேச முக்கியத்துவம் வாய்ந்த நகரமாக மாறியுள்ளது.
தூத்துக்குடி ஏற்கெனவே வரலாற்று பெருமைமிகு துறைமுகம், ரயில் போக்குவரத்து, நான்கு வழிச்சாலை வசதிகளுடன் பல்வேறு தொழிற்சாலைகளும் அங்கு உள்ளன. விமான நிலையத்துக்கும், தூத்துக்குடி நகரப்பகுதிக்கும் இடையிலான சாலை வசதி விரைவாகவும், நவீனமயமாகவும்இருந்தால் பொதுமக்கள், தொழில்துறை பயணிகள் நேரத்தை சிக்கனமாக பயன்படுத்தலாம். மேலும், பேருந்து வாடகை காா், ரயில் வசதிகள் ஒருங்கிணைக்கப்பட்டால் நன்றாக இருக்கும் என்பது பொதுமக்களின் பரவலான கருத்து.