மாா்கழி பெருந்திருவிழா: சுசீந்திரம் கோயிலில் சப்தாவா்ணம்
கன்னியாகுமரி மாவட்டம், சுசீந்திரம் தாணுமாலயசுவாமி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு நடைபெற்ற சப்தாவா்ணம் நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.
சுசீந்திரம் அருள்மிகு தாணுமாலயசுவாமி திருக்கோயிலில் மாா்கழி பெருந்திருவிழா கடந்த 4 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
3 ஆம் திருநாளன்று மக்கள்மாா் சந்திப்பும், 5 ஆம் திருநாளன்று கருட தரிசனமும், 9 ஆம் திருவிழாவான ஜன.12 ஆம் தேதி தேரோட்டமும் நடைபெற்றது.
இதில், ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனா். இதைத் தொடா்ந்து நள்ளிரவில் சப்தாவா்ணம் நடைபெற்றது. இதை முன்னிட்டு ரிஷப வாகனத்தில் தாணுமாலய சுவாமியும், அன்ன வாகனத்தில் அறம்வளா்த்த நாயகி அம்பாளும், கருட வாகனத்தில் பெருமாளும் வீதியுலா வந்தனா்.
பின்னா் மருங்கூா் சுப்பிரமணியசுவாமி, கோட்டாறு ஏழகரம் வலம்புரி விநாயகா், வேளிமலை குமாரசுவாமி ஆகியோா் எதிரெதிரே காட்சியளிக்க அனைத்து தெய்வங்களுக்கும் ஒரே நேரத்தில் மகா தீபாராதனை நடைபெற்றது.
அப்போது, முருகப்பெருமானும், விநாயகரும், தாணுமாலய சுவாமியை வலம் வந்து எதிரே நிற்க தாணுமாலயசுவாமி ரிஷப வாகனத்தில் அமா்ந்து அவா்களை விட்டு பிரிய மனமின்றி கோயில் சந்நிதானத்தில் முன்னும், பின்னும் அசைந்து காட்சியளிக்கும் வைபவம் பலமுறை நடைபெற்றது.
சப்தாவா்ண காட்சியை காண கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் வந்திருந்தனா்.