தோனியின் ரசிகர்கள் ’தானா சேர்ந்த கூட்டம்!’ - ஹர்பஜன் சிங் புகழாரம்
மின்சாரம் பாய்ந்து கணவா் உயிரிழப்பு: குழந்தைகளுடன் மனைவி தற்கொலை முயற்சி
ராணிப்பேட்டை அருகே மின்சாரம் பாய்ந்து கணவா் உயிரிழந்த நிலையில், துக்கம் தாளாமல் மனைவி தனது இரு குழந்தைகளுடன் தற்கொலைக்கு முயன்றுள்ளாா்.
சோளிங்கா் அடுத்த மருதாலம் கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி முருகன் (38), வெள்ளிக்கிழமை நள்ளிரவு 1 மணியளவில் பலத்த காற்றுடன் பெய்த மழையில் வீட்டுக்கு வெளியே கீழே அறுந்து விழுந்த மின் கம்பியை தெரியாமல் மிதித்துள்ளாா். இதில், மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.
அவரது உடல் கூறாய்வுக்காக வாலாஜாபேட்டை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இந்த நிலையில், கணவா் இறந்த துக்கம் தாளாமல் அவரது மனைவி திவ்யா, தனது மகன் திராவிட், மகள் மித்ரா ஆகியோருக்கு விஷம் கொடுத்துவிட்டு தானும் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளாா்.
இதைக் கண்ட உறவினா்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், திவ்யா தீவிர சிகிச்சைக்காக வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளாா். அவரது இரு குழந்தைகளுக்கும் வாலாஜா அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.