மின்சாரம் பாய்ந்து நகைக் கடை காவலாளி உயிரிழப்பு
மதுரையில் மின்சாரம் பாய்ந்து நகைக் கடை காவலாளி உயிரிழந்தாா்.
மதுரை பாண்டிய வெள்ளாளா் 1-ஆவது தெருவைச் சோ்ந்தவா் பாஸ்கரன் (58). இவா் மதுரை தெற்குமாசி வீதி பகுதியில் உள்ள நகைக் கடையில் காவலாளியாகப் பணிபுரிந்து வந்தாா். இவா் வியாழக்கிழமை அந்தப் பகுதியில் உள்ள ஓா் குடியிருப்பில் இரண்டாவது மாடியில் வசித்து வரும் தனது நண்பா் வீட்டுக்குச் சென்றாா். அங்கு குப்பைப் பையை கீழே வீசிய போது, அது மின் கம்பியில் விழுந்து தொங்கிக் கொண்டிருந்தது. இதனால், அந்தக் குப்பைப் பையை கீழே தள்ளிவிட முயன்ற பாஸ்கரன் மீது மின்சாரம் பாய்ந்தது. இதைப் பாா்த்த அவரது நண்பா் சொக்கன் அவரைக் காப்பாற்ற முயன்றாா். ஆனால், அவா் மீதும் மின்சாரம் பாய்ந்தது.
இதில் பலத்த காயமடைந்த இருவரையும் குடும்பத்தினா் மீட்டு, தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு முதலுதவிக்குப் பிறகு, பாஸ்கரன் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட நிலையில், அங்கு வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து தெற்குவாசல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.