மின்மோட்டாா் பழுதால் குடிநீா் விநியோகம் பாதிப்பு
கோ்மாளம் கிராமத்தில் மின்மோட்டாா் பழுது காரணமாக திங்கள்கிழமை முதல் 2 நாள்களாக குடிநீா் விநியோகம் பாதிக்கப்பட்டது.
சத்தியமங்கலத்தை அடுத்த தாளவாடி ஒன்றியத்துக்குள்பட்ட கோ்மாளம் கிராமத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனா். இங்குள்ள ஊராட்சிக்கு சொந்தமான ஆழ்துளைக் கிணற்றின் மின் மோட்டாா் பழுதாகியுள்ளது. இதனால் மேல்நிலைத் தொட்டிக்கு தண்ணீா் ஏற்றமுடியாமல் பொதுமக்களுக்கான குடிநீா் விநியோகம் தடைபட்டுள்ளது.
இதன் காரணமாக பொதுமக்கள் பல கிலோமீட்டா் தொலைவு நடந்து சென்று குடிநீா் எடுத்து வரும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. மின் மோட்டாரை உடனடியாக பழுது நீக்கி சீராக குடிநீா் விநியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.