அரசியலைக் கடந்து திருப்பணிகள் செய்கிறோம்! -முதல்வர் மு.க.ஸ்டாலின்
மிஷாவ்: ஒரு மனிதன், ஓர் இலக்கு - ஒரு புத்தகக்கடைக்காரரின் கதை - பகுதி 21
அமெரிக்க சமூகத்தில் இனப்பாகுபாட்டை சகித்துக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிராசையுடன் வாழ்க்கையைத் தொடங்கிய மில்லியன் கணக்கான கறுப்பர்களில் அவரும் ஒருவர்.
கல்வியறிவில் நாட்டமில்லாமல், குற்றச் செயல்களின் உறைவிடமாக வாழ்ந்த ஆயிரக்கணக்கான கறுப்பர்களில் அவரும் ஒருவர். அடிமைத்தளை என்ற நுகத்தடியிலிருந்து கறுப்பின சமூகத்தை விடுவிக்க ஏதாவது செய்ய முயன்ற நூற்றுக் கணக்கான இளைஞர்களில் அவரும் ஒருவர். “ஒரு செயல் திட்டம் தேவை என்பதை மக்கள் உணராதவரை, அவர்களுக்கு உங்களால் எந்தத் திட்டத்தையும் வழங்க முடியாது.
மக்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் என்ன?, அந்தப் பிரச்னையை உருவாக்கும் அடிப்படை காரணங்கள் என்னென்ன போன்றவை பற்றிய முழுமையான புரிதலை அவர்களுக்கு வழங்கிவிட்டால், அவர்களே செயல்திட்டத்தை உருவாக்கி, அவர்களே செயல்படத் தொடங்கிவிடுவார்கள்.” - இது மால்கம் X முன் வைத்த கருத்துக்கள்.
இந்தக் கருத்துக்களின் செயல் வடிவமாக வாழ்ந்தவர் லூயிஸ் மிஷாவ். கறுப்பர்கள் அடிமைத்தளையில் உழல்வதற்கு அறியாமைதான் காரணம் என்பதை உணர்ந்து, அதனைக் களைய வாசிப்பை ஓர் இயக்கமாக முன்னெடுத்தார். ஹார்லெம் நகரில் 1939-ம் ஆண்டு தொடங்கப்பட்ட தேசிய நினைவு ஆஃப்ரிக்க புத்தகக் கடை, கறுப்பின சமூகத்தில் சத்தமே இல்லாமல் அறிவுப் புரட்சித் தீயைக் கொழுந்து விட்டெறியச் செய்தது.
1968-ம் ஆண்டு மே மாதம், கடையை வேறு இடத்திற்கு மாற்றச் சொல்லி அரசு தரப்பில் நிர்ப்பந்தம் தரவும், அருகில் இருந்த லெனாக்ஸ் அவென்யூவிற்குக் கடையை மாற்றினார். ஏற்கெனவே இருந்த கடைக்கு சற்று தொலைவிலேயே புதிய கடை திறக்கப்பட்டதால் வாடிக்கையாளர் வருகையில் எந்தப் பிரச்னையும் ஏற்படவில்லை. 1973-ம் ஆண்டு இறுதியில் மீண்டும் கடையை மூடச் சொல்லி அரசு தரப்பில் அழுத்தம் கொடுக்கப்பட்டது. அதாவது 1974-ம் ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதி முதல், லெனாக்ஸ் அவென்யூ பகுதியில் தேசிய நினைவு ஆஃப்ரிக்க புத்தகக் கடை செயல்படக் கூடாது என்பது அரசின் உத்தரவு.
“ஏன் மீண்டும் கடையை வேறு இடத்திற்கு மாற்றாமல், ஒட்டுமொத்தமாக கடையை மூடிவிட்டீர்கள். உங்களுடைய ஆன்மாவோடு ஒன்றிணைந்த புத்தகக் கடையை மூடும் முடிவுக்கு எப்படி வந்தீர்கள் மிஷாவ்?”
“இவா மேடம்… எனக்கு வயதாகி விட்டதல்லவா… இரண்டாவது முறையாகக் கடையை மூடச் சொல்லி நெருக்கடி வந்தபோது, என்பது வயதைத் தொட்டு விட்டேன். அது மட்டுமல்ல, புற்றுநோயின் அறிகுறிகள் அதிகரித்து, உடலும் ஒத்துழைக்கவில்லை. கடையை என்னுடைய மனைவி பெட்டியால் கவனித்துக் கொள்ள முடியும்தான். என்னுடைய உதவி இல்லாமல் அவர் மட்டும் சிரமப்படுவதை நான் விரும்பவில்லை. மகனுக்கு இதில் விருப்பம் இருப்பதாகத் தெரியவில்லை. அது மட்டுமல்ல, அவன் இப்பத்தான் படிச்சு முடிக்கிறான், அவனுடைய விருப்பங்கள் வேற மாதிரி இருந்தது. அதனால், கனத்த இதயத்தோடு கடையை மூடும் முடிவுக்கு வந்தேன்.”
“ஒரு நெருடலான கேள்வி இருக்கிறது, அதற்காக கோபித்துக்கொள்ள வேண்டாம் மிஷாவ். ஐந்து புத்தகங்களோடு கடையைத் தொடங்கும்போது, வயிற்றுப் பசியைப் போக்க ஹோட்டல்களின் ஜன்னல் கண்ணாடிகளைக் கழுவி அன்றாடத்தைப் போக்கும் நிலையில் இருந்தீர்கள். ஆனால் ஒரு பத்து ஆண்டுகளில் உங்கள் கடை அமெரிக்காவிலேயே மிகப் பெரிய புத்தகக் கடைகளில் ஒன்றாக வளர்ந்துவிட்டது. ஹார்லெமை விட்டுப்போய் மேட்டுக்குடியினர் வசிக்கும் நகரில் வசதியாக வாழ்ந்திருக்கலாமே…”
“இவா… தான் வெள்ளையனைப் போல ஆகிவிட வேண்டும் என்ற மெல்லிய ஆசை கறுப்பர்களிடம் ஏதோ ஓர் ஓரத்தில் இருக்கிறது. அவர்களின் செயல்பாடுகளை உற்றுக் கவனித்தால் இதை நீங்கள் புரிந்துகொள்ளலாம் இவா. அந்த ஆசையின் மிக மிகக் குறைந்த வெளிப்பாடுதான் சுருள் சுருளாக உள்ள கறுப்பர்களின் இயல்பான தலைமுடியை, அந்த அமைப்பிலிருந்து மாற்றிக் கொள்ள முயல்வது; அதை ‘காங்க் (Conk)’ அப்டின்னு ஸ்டைலா சொல்றாங்க. இப்பவும் சில கறுப்பர்கள், அவ்வளவு ஏன் பிரபலமாக இருக்கக்கூடிய கறுப்பர்கள்கூட காங்க் செய்து கொள்கிறார்கள். அப்படி ஒருவர் என் கடைக்கு வந்தார். அவர் பிரபலமான குத்துச்சண்டை வீரர். அவரிடம் நான் சொன்னேன், ‘தலையில் வைத்திருப்பது படுக்கையில் உதிர்ந்து விடும். ஆனால், தலையில் வைக்க வேண்டியதை வைத்தால், அது நாம் இறந்து படுக்கும் வரை நமக்கு பயன்படும்.’ அவர் சிரித்துக் கொண்டே, ரொம்ப சரியாச் சொன்னீங்கன்னாரு...
“செல்லப் பிராணிகளுக்கும் அடிமைகளுக்கும் அவர்களின் உரிமையாளர்கள்தான் பெயர் வைக்கின்றனர்; சுதந்திரமானவர்கள்தான் தங்களுக்குத் தாங்களே பெயர் வைத்துக் கொள்கின்றனர் என யாரோ சொல்லி கேள்விப்பட்டிருக்கிறேன். மிகச் சரியான வாசகம்தானே இவா?”
நான் ஆமோதித்துத் தலையசைத்தேன்.
“நான் இந்தச் சேரியில்தான் உழன்று இந்த நிலைக்கு ஆளாகியிருக்கிறேன். அதனால் இந்தப் பகுதியை விட்டுப் போக எனக்கு மனமில்லை. என்னுடைய அண்ணனிடம் அதிகமாக பணமிருந்தது. ஆனால் என்னிடம்? அதேசமயம் எனக்கு மனநிறைவாக இருக்கிறது.
கறுப்பர்களிடம் புத்தகங்களை விற்கவே முடியாது என்று கூறியவர்களும், கறுப்பர்கள் சாப்பிடுவதற்குத்தான் லாயக்கானவர்கள் என்று சொன்னவர்களும் என்னுடைய கடையைப் பார்த்து பிரமித்து நின்றார்கள். இது வெறுமனே வியாபாரம் மட்டும் கிடையாது, நான் ஊன்றிய விதை இப்போது வளர்ந்து பயனளிக்கிறது. கறுப்பின சமூகத்தை ஒரு படி முன்னோக்கி நகர்த்தியுள்ளது.”
“நேர்காணலை முடித்துக் கொள்ளலாம் மிஷாவ்… இறுதியாக ஒரு கேள்வி. கறுப்பர்களுக்கு அறிவைப் புகட்டும் மகத்தான பணியில் உங்களால் மறக்க முடியாத நிகழ்வென ஏதாவது இருக்கிறதா?”
நீண்ட நேரம் யோசித்தவர், “பெட்டி, நினைவிருக்கிறதா… ஒன்றிரண்டு மாதங்களுக்கு முன்பு காஃபி ஷாப்பில் இருக்கும் போது ஒரு இளைஞனைப் பார்த்தோமே… அவனைப் பற்றிச் சொல்லவா?”
“யெஸ் பாஸ். இந்த நேர்காணலின் முத்தாய்ப்பான விஷயமாக அது இருக்கும். சொல்லுங்க…” மனைவி பெட்டி அனுமதி கொடுக்கவும் மீண்டும் உற்சாகமடைந்தார். உரையாடுவதற்கு எப்போதுமே அதிகம் விருப்பம் கொண்டவராக இருந்தார். பிறருடன் உரையாடி அவர்களின் மூளையைச் சலவை செய்தார். அதேபோல ஏராளமான இளைஞர்கள், மிஷாவ்வின் கருத்துக்களைக் கேட்பதற்காகவே ஆவலுடன் புத்தகக் கடைக்கு வந்தனர்.
புத்தகக் கடை வெற்றிகரமாக இயங்கியதற்கு மிஷாவ்வின் உரையாடும் குணமே காரணமாக இருந்திருக்கலாம். ஆனால், கடையை மூடிய பின், அதுவும் புற்றுநோய் தாக்குதலுக்குப் பின் உரையாடுவதற்கான வாய்ப்பு அருகியிருக்கும். அந்த ஏக்கத்தை - ஆவலை என்னுடைய நேர்காணல் பூர்த்தி செய்திருக்கும் என எண்ணினேன். “பெட்டியோடு காஃபி ஷாப்பில் இருக்கும் போது என் தோளில் ஒரு இளைஞர் கை போட்டு என்னைத் தெரிகிறதா எனக் கேட்டார். அந்த இளைஞரை என்னால் நினைவில் கொண்டு வர முடியவில்லை.
‘24 ஆண்டுகள் ஆகிவிட்டதால் என்னை உங்களுக்கு அடையாளம் தெரியாமல் இருக்கலாம், சிறுவனாக இருந்த போது, நானும் அப்பாவும் உங்க கடைக்கு வந்திருக்கிறோம். அப்போது என்னுடைய அப்பா, மருத்துவம் தொடர்பான புத்தகம் ஏதாவது இருக்கிறதா எனக் கேட்டார். The Negro in Medicine என்ற புத்தகத்தை எடுத்து கொடுத்து விட்டு, இந்தச் சிறுவன் டாக்டராக வேண்டுமென நீங்கள் என் அப்பாவிடம் சொன்னீர்கள்’ என அந்த இளைஞர் பழைய நாட்களை நினைவுபடுத்தினார்.
விசிட்டிங் கார்டை எடுத்து நீட்டி, பாஸ்டன் நகருக்கு வரும் போது கட்டாயம் என்னுடைய மருத்துவமனைக்கு வர வேண்டும் என கேட்டுக் கொண்டார். அந்த இளைஞருடைய பெயர் கால்வின். இப்போது அவர் டாக்டராகி விட்டார். இருவரும் நீண்ட நாட்களைப் பழகிய நண்பர்களைப் போல கட்டிப் பிடிக்கவும், என்னுடைய கண்களில் நீர் ததும்பியது. இப்போது நினைத்தாலும் அந்தக் கணம் எனக்கு பெரும் மகிழ்ச்சியையும், நெகிழ்ச்சியையும் தருகிறது.
“என்னுடைய அண்ணனிடம் பணம் இருந்திருக்கலாம் இவா மிஷேல்… உண்மையில் நான்தான் பணக்காரனாக இந்த உலகத்தை விட்டுச் செல்லப் போகிறேன். ஃபிரடெரிக் டக்ளஸ் சொன்னது போல, என்னுடைய இனத்தை மேம்படுத்துவதற்காக நான் ஏதாவது செய்திருப்பது, உண்மையில் என் ஆன்மாவை பெரும் மகிழ்வால் நிரப்புகிறது.” வலது உள்ளங்கையை இடது மார்பில் வைத்து ஆழமாக கண்களை மூடி, நிதானமாக மூச்சை இழுத்து விட்டார்.
வெள்ளையனின் தயவை சார்ந்திராமல் சுயசார்புத் தன்மையோடு வாழத் தொடங்கும் போது, அடிமைத்தனம் மெல்ல ஒழியும் என நம்பிய லூயிஸ் மிஷாவ், இந்த விழிப்பு நிலையை அடைய கறுப்பர்கள் வாசிக்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்திற்காக புத்தகக் கடையைத் தொடங்கினார். அந்த லட்சியத்தில் வெற்றிபெற்ற லூயிஸ் மிஷாவ், தன் வாழ்நாளில் ஒருமுறைகூட வெள்ளையனிடம் அற்பக் கூலிக்கு வேலை பார்த்ததில்லை என்ற விஷயம் உரைக்கவும், அவரை வியந்து பாராட்டி கைகுலுக்கி நன்றி நவின்று விடைபெற்றேன்.
- முற்றும்.