மீண்டும் தொடங்கும் ஐபிஎல்: தயக்கம் காட்டும் வெளிநாட்டு வீரர்கள்
ஐபிஎல் கிரிக்கெட் போட்டி வரும் 17-ஆம் தேதி மீண்டும் தொடங்கும் நிலையில், வெளிநாட்டு வீரர்களை மீண்டும் அதில் பங்கேற்கச் செய்யும் வகையில் அவர்கள் சார்ந்த கிரிக்கெட் வாரியங்களுக்கு பிசிசிஐ அழுத்தம் கொடுத்து வருகிறது.
ஐபிஎல் போட்டியின் 18-ஆவது சீசன், கடந்த மார்ச் 22-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. இந்நிலையில் மே முதல் வாரத்தில் இந்தியா - பாகிஸ்தான் இடையே போர்ப் பதற்றம் அதிகரித், இரு நாட்டு ராணுவங்களும் பரஸ்பர தாக்குதலில் ஈடுபட்டன.
இதனால் பாதுகாப்பு காரணங்களுக்காக ஐபிஎல் போட்டியை ஒரு வாரத்துக்கு நிறுத்தி வைப்பதாக பிசிசிஐ கடந்த 9-ஆம் தேதி அறிவித்தது. இதையடுத்து ஐபிஎல் அணிகளில் விளையாடி வந்த அந்நிய வீரர்கள் பலர் தங்களின் சொந்த நாடுகளுக்குத் திரும்பினர்.
இச்சூழலில், இந்தியா - பாகிஸ்தான் கடந்த சனிக்கிழமை சண்டை நிறுத்தத்தை அறிவித்தன. இதனால் மீண்டும் வரும் 17-ஆம் தேதி ஐபிஎல் போட்டியை தொடங்குவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. வெளிநாட்டு வீரர்கள் மீண்டும் போட்டியில் பங்கேற்க இந்தியா திரும்ப வேண்டிய நிலையில், அதில் சிலருக்குத் தயக்கம் இருப்பதாகத் தெரிகிறது.
தற்போதைய பாதுகாப்பு சூழல் மற்றும் தேசிய அணிக்கான பணி போன்ற காரணங்களால் அவர்கள் தயங்குவதாக கூறப்படுகிறது. இதையடுத்து சம்பந்தப்பட்ட கிரிக்கெட் வாரியங்களுடன் பிசிசிஐ-யும், அந்தந்த வீரர்களுடன் அவர்கள் சார்ந்த ஐபிஎல் அணிகளும் பேச்சுவார்த்தை நடத்தி போட்டியில் மீண்டும் பங்கேற்க அழுத்தம் கொடுத்து வருகின்றன.
ஆஸ்திரேலியாவின் பேட் கம்மின்ஸ், டிராவிஸ் ஹெட் ஆகியோர் மீண்டும் ஐபிஎல் போட்டிக்குத் திரும்புவது உறுதியாகியுள்ள நிலையில், மார்கஸ் ஸ்டாய்னிஸ், ஜோஷ் இங்லிஸ் ஆகியோர் அதுகுறித்து யோசித்து வருகின்றனர்.
இங்கிலாந்து வீரர் ஜாஸ் பட்லர் நெருக்கடியில் இருக்கிறார். மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக வரும் 29-ஆம் தேதி தொடங்கும் ஒருநாள் தொடரில் இங்கிலாந்து அணியில் அவரும் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், ஜூன் 3-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியில் பங்கேற்க அவர் யோசித்து வருகிறார்.
இன்னும் சில வீரர்கள் தயங்கும் நிலையில், பெரும்பாலான வீரர்கள் மீண்டும் போட்டியில் விளையாட இந்தியா திரும்புவதாகத் தெரிகிறது.