தொல்காப்பியா் பிறந்த நாள்: காப்பிக்காட்டில் சிலைக்கு மரியாதை
ஐபிஎல் தொடங்கினாலும் ஸ்டார்க் வர மாட்டார்! தில்லி அணிக்கு பெரும் பின்னடைவா?
ஐபிஎல் தொடர் மீண்டும் தொடங்கி நடைபெற்றாலும் தில்லி வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் இந்தியாவுக்கு செல்லமாட்டார் என அவரது மேலாளர் தெரிவித்திருப்பது தில்லி அணி ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்திருக்கிறது.
நடப்பு ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் 22 ஆம் தேதி தொடங்கி இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் நடைபெற்று வந்தது. இந்தத் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டிய நிலையில், கடந்த வியாழக்கிழமை இரவு இந்தியா மீது பாகிஸ்தான் ராணுவத்தினர் ட்ரோன் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து பஞ்சாப் - தில்லி இடையிலான போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது.
இதனால், ஐபிஎல் தொடர் தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்பட்டு, வெளிநாட்டைச் சேர்ந்த அணி வீரர்கள் பலர் தாயகம் திரும்பினர். இந்த நிலையில், இரு நாடுகளுக்கும் இடையேயான போர் நேற்றிரவு முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டதால் ஐபிஎல் நிர்வாகம் போட்டிகள் எங்கு நடத்த வேண்டுமென ஆலோசனை நடைபெற்று வருகிறது.
ஐபிஎல் அணிகள் வெளிநாட்டுக்குச் சென்ற வீரர்கள், பயிற்சியாளர்களை மீண்டும் இந்தியாவுக்கு வருமாறு அழைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐபிஎல் மே 15ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஞாயிற்றுக்கிழமையான நேற்று தனது மனைவி அலீசா ஹீலியுடன் ஆஸ்திரேலியாவுக்கு ஸ்டார்க் திரும்பிய நிலையில், அவர் ஐபிஎல் தொடர் தொடங்கினாலும், இந்தியாவுக்கு வர மாட்டார் என்று அவரது மேலாளர் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி கிரிக்கெட் ஆஸ்திரேலியா கூறுகையில், “இது வீரர்களின் தனிப்பட்ட முடிவு. அதில், நாங்கள் தலையிட முடியாது” எனத் தெரிவித்துள்ளது.
தில்லி அணியால் ரூ.11.75 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட மிட்செல் ஸ்டார்க், இதுவரை 12 போட்டிகளில் விளையாடி 14 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார்.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களில் பாட் கம்மின்ஸ், ஜோஷ் ஹேசில்வுட் மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகியோர் விரைவில் தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக லார்ட்ஸில் நடைபெறும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்காக இங்கிலாந்துக்கு செல்லவுள்ளனர். அதைத் தொடர்ந்து மேற்கிந்தியத் தீவுகளில் மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரிலும் விளையாடவுள்ளதால் அவர்கள் பங்கேற்பது சந்தேகம்தான் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: ஆஸி. பந்துவீச்சாளர்களும்.. வான் பாதுகாப்பு அமைப்பும்..! லெஃப்டினன்ட் ஜெனரல் புகழாரம்!