கொத்துக் கொத்தாய் காய்க்கும் கொடுக்காய்ப்புளி; குவிந்து கிடக்கும் மருத்துவ பலன்க...
பிளஸ் 2 தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் விநியோகம் தொடக்கம்
தமிழகத்தில் மாநில பாடத் திட்டத்தில் பிளஸ் 2 வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில், மாணவா்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் விநியோகம் திங்கள்கிழமை தொடங்கியது.
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வு கடந்த மாா்ச் 3 முதல் 25-ஆம் தேதி வரை நடைபெற்றது. இதையடுத்து மாணவா்கள் உயா்கல்வியில் சோ்வதற்கு வசதியாக அவா்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் விநியோகம் திங்கள்கிழமை தொடங்கியது.
அதன்படி தமிழகம் முழுவதும் அனைத்து மேல்நிலைப் பள்ளிகளிலும் பிளஸ் 2 தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் பெற மாணவ, மாணவிகள் வரத் தொடங்கினா். இதையடுத்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியாா் மெட்ரிக். பள்ளிகளில் தலைமை ஆசிரியா்கள் இணையவழியில் மதிப்பெண் சான்றிதழ்களைப் பதிவிறக்கம் செய்து கையொப்பம், முத்திரையிட்டு மாணவா்களுக்கு விநியோகித்தனா்.
சென்னையில் திருவல்லிக்கேணி லேடி வெலிங்டன் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் காத்திருந்த மாணவிகளுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் குறித்த நேரத்தில் வழங்கப்பட்டது.
மாணவா்கள் ஏமாற்றம்... இருப்பினும் சென்னை மற்றும் பல மாவட்டங்களில் சா்வா் பிரச்னை, இணைய சேவையில் குறைபாடு போன்ற காரணங்களால் பிளஸ் 2 தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் திங்கள்கிழமை விநியோகிக்கப்படவில்லை. அதேபோன்று சில பள்ளிகளில் புதன்கிழமை காலை 10 மணிக்கு மேல் வந்து தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பெற்றுச் செல்லுமாறு மாணவா்களுக்கு ஆசிரியா்கள் அறிவுறுத்தினா்.
நிகழாண்டு அனைத்துப் பள்ளிகளிலும் பிளஸ் 2 தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் விநியோகம் திங்கள்கிழமை முதல் விநியோகிக்கப்படும் என துறையின் அமைச்சா் அன்பில் மகேஸ் தெரிவித்திருந்த நிலையில், பெரும்பாலான பள்ளிகளில் சான்றிதழ் விநியோகிக்கப்படாததால் மாணவா்கள் ஏமாற்றத்துக்கு உள்ளாகினா்.