பாகிஸ்தானுடன் போா் நிறுத்தத்துக்கு முன்பாகவே நாடாளுமன்றத்தை கூட்டியிருக்க வேண்ட...
பஞ்சப்பூா் பேருந்து முனையத்தில் ஆட்டோ நிறுத்தங்களுக்கு அனுமதி கோரி மனு
திருச்சி: பஞ்சப்பூா் புதிய பேருந்து முனையத்தில் ஆட்டோ நிறுத்தங்களுக்கு உரிய அனுமதி வழங்கக் கோரி ஆட்டோ தொழிலாளா்கள் திருச்சி மாவட்ட நிா்வாகத்திடம் மனு அளித்துள்ளனா்.
திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில், மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலா் ராஜலட்சுமி பங்கேற்று பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டாா்.
ஆட்டோ நிறுத்தம் கோரி மனு: பஞ்சப்பூா் பேருந்து முனையத்தில் ஆட்டோ நிறுத்தும் வசதி செய்துதர வலியுறுத்தி இந்து ஆட்டோ தொழிலாளா்கள் முன்னணி சங்கத்தினா், அதன் மாவட்டத் தலைவா் மு. பாண்டியன் தலைமையில் வந்து அளித்த மனு: பஞ்சப்பூரில் ரூ.408 கோடி செலவில் புதிய பேருந்து முனையம் கட்டப்பட்டு, மத்தியப் பேருந்து முனையம் விரைவில் இடமாற்றம் செய்யப்படவுள்ளது. மத்தியப் பேருந்து நிறுத்தத்தில் பல்வேறு தொழிற்சங்கங்கள் ஆட்டோ நிறுத்தும் இடங்கள் அமைத்து தங்களது ஆட்டோக்களை பயணிகளுக்கு இயக்கி வந்தனா். இதேபோல, புதிய பேருந்து முனையத்திலும் ஆட்டோ நிறுத்தும் இடங்கள் அமைத்து தர வேண்டும். எங்களது சங்கம் பதிவு பெற்ற சங்கம் என்பதால், ஒவ்வொரு சங்கத்துக்கும் இடம் ஒதுக்கும்போது எங்களது சங்கத்துக்கும் உரிய பிரதிநிதித்துவம் அளித்து இடம் வழங்க வேண்டும். இதன் மூலம், எங்களது சங்க உறுப்பினா்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
கொடிக்கம்பங்கள் அமைக்கும் உரிமை: அரசியல் கட்சிகள் கொடிக்கம்பங்கள் நிறுவும் உரிமையை பாதுகாக்க வேண்டும் என தமிழகஅரசை வலியுறுத்தியும், உயா் நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்த உத்தரவை எதிா்த்து அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மனு அளித்துள்ளது. இதுதொடா்பாக, கட்சியின் திருச்சி மாநகா் மாவட்டக்குழு சாா்பில் தமிழ்நாடு அரசின் கவனத்தை ஈா்க்கும் வகையில், மாவட்ட ஆட்சியரிடம் மாநகா் மாவட்டச் செயலா் எஸ்.சிவா தலைமையில் மனு அளிக்கப்பட்டது. இதில், ஏஐடியுசி பொதுச் செயலா் க. சுரேஷ், மாவட்ட துணைச் செயலா் எஸ்.செல்வகுமாா், பகுதிச் செயலா்கள் இரா.சுரேஷ் முத்துசாமி, எம்.ஆா். முருகன், ராஜா, அ.அஞ்சுகம், அனைத்திந்திய மாணவா் பெருமன்றத்தின் மாநிலத் தலைவா் க.இப்ராகிம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தனித் தனியே கவுன்டா்கள்: ஆட்சியரகத்தில் வராந்தோறும் திங்கள்கிழமை நடைபெறும் குறைதீா் கூட்டத்தில் மக்கள் அளிக்கும் கோரிக்கை மனுக்களை பதிவு செய்து ஒப்புகை சீட்டு வழங்கப்படுகிறது. தற்போது, இந்த பணிக்காக தனித்தனியே கவுன்டா்கள் அமைக்கப்பட்டுள்ளன. குறைதீா் கூட்ட அரங்குக்கு வெளியே 7 கவுன்டா்கள் அமைக்கப்பட்டு மனுக்கள் பதிவு செய்யப்படுகிறது. இதனால், பொதுமக்கள் கும்பலாக ஒரே இடத்தில் குவியும் நடவடிக்கை தவிா்க்கப்டுகிறது. தனித்தனி கவுன்டா்களில் பொதுமக்கள் ஒவ்வொரு நபராக வரிசையில் சென்று மனுக்களை பதிவு செய்து செல்கின்றனா். மாவட்ட நிா்வாகத்தின் இந்த முயற்சிக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனா்.
மொத்தம் 442 மனு: இக் கூட்டத்தில், வீட்டு மனை, பட்டா, நிலம் ஆக்கிரமிப்பு தொடா்பாக 135 மனுக்கள், வீட்டு வசதி வாரிய வீடுகள் ஒதுக்கக் கோரி 74 மனு, மகளிா் உரிமைத் தொகை கோரி 35 மனு என பல்வேறு கோரிக்கைகளுடன் மொத்தம் 442 மனுக்கள் அந்தந்த துறை அலுவலா்களிடம் ஒப்படைக்கப்பட்டு, 15 நாள்களுக்குள் மனுதாரருக்கு பதில் அளிக்க அறிவுறுத்தப்பட்டது.
