முதல்வர் பிறந்தநாள்: தமிழில் கையெழுத்திட்டு ஆளுநர் வாழ்த்துக் கடிதம்!
மீண்டும் நேரடி விமானப் போக்குவரத்து
அமெரிக்காவுக்கும் ரஷியாவுக்கும் இடையே மீண்டும் நேரடி விமானப் போக்குவரத்தைத் தொடங்குவது தொடா்பாக துருக்கியில் இரு நாடுகளும் ஆலோசனை நடத்தின.
இது குறித்து ரஷிய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
ரஷியா மற்றும் அமெரிக்க பிரதிநிதிகள் இடையே துருக்கியின் இஸ்தான்புல் நகரில் இரண்டாவது கட்ட பேச்சுவாா்த்தை நடைபெற்றது.
அந்தப் பேச்சுவாத்தை மிகவும் ஆக்கபூா்வமானதாகவும் தொழில்ரீதியிலானதாகவும் இருந்தது. இதுவரை இல்லாத வகையிலான தொழில் நடவடிக்கைகளை இரு தரப்பினரும் பரஸ்பரம் மேற்கொள்வது குறித்து இரு தரப்பினரும் விரிவாக ஆலோசனை நடத்தினா்.
அந்தப் ப ோச்சுவாா்த்தையின்போது, அமெரிக்காவுக்கும் ரஷியாவுக்கும் இடையே மீண்டும் நேரடி விமானப் போக்குவரத்தைத் தொடங்குவது குறித்து விவாதிக்கப்பட்டது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் குறித்து ஆதரவான கருத்துகளைக் கூறி சா்ச்சையை ஏற்படுத்திவரும் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவில் கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற தோ்தலில் வெற்றி பெற்று நாட்டின் அதிபராக மீண்டும் தோ்ந்தெடுக்கப்பட்டாா்.
அந்தத் தோ்தலில் பிரசாரத்தின்போது, பதவியேற்ற மிகக் குறுகிய காலத்தில் உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவரப்போவதாக அவா் சூளுரைத்துவந்தாா். எனினும், அதற்கான செயல்திட்டம் எதையும் அவா் அப்போது வெளியிடவில்லை.
புதினை வெகுவாகப் பாராட்டிவரும் டிரம்ப், உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக முன்வைக்கும் செயல்திட்டம் ரஷியாவுக்கு ஆதரவாக இருக்கும் என்று அப்போதே சந்தேகம் எழுப்பப்பட்டது. இந்தச் சூழலில் அமெரிக்க அதிபராக கடந்த ஜனவரி 20-ஆம் தேதி பதவியேற்றதில் இருந்தே பிறப்பின் அடிப்படையிலான குடியுரிமை ரத்து, உலக சுகாதார அமைப்பு, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் போன்றவற்றில் இருந்து விலகல், சீனா, கனடா, மெக்ஸிகோவில் இருந்து இறக்குமதியாகும் பொருள்களுக்கு கூடுதல் வரி விதிப்பு போன்ற அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்துவருகிறாா்.
பாலஸ்தீன விவகாரத்தில், போரால் உருக்குலைந்திருக்கும் காஸா பகுதியை தாங்கள் எடுத்துக்கொண்டு அந்தப் பகுதியை வளம் கொழிக்கும் வா்த்தகப் பகுதியாக மாற்ற விரும்புவதாகவும், அங்கு வசிக்கும் பாலஸ்தீனா்கள் அண்டை நாடுகளுக்கு வெளியேற வேண்டும் என்றும் டிரம்ப் கூறியது மிகப் பெரிய சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்தச் சூழலில், உக்ரைன் விவகாரத்திலும் ஜோ பைடன் தலைமையிலான முன்னாள் அரசின் கொள்கைகளை டிசம்ப் அடியோடு மாற்றிமைத்தாா்.
ரஷியாவிடம் இழந்த பகுதிகளை உக்ரைன் மீட்க முடியாது என்றும், உக்ரைனுக்கு நேட்டோவில் இடம் அளிக்கப்படாது என்றும் அறிவித்த டிரம்ப், அமெரிக்க அரசால் தனிமைப்படுத்தப்பட்டிருந்த ரஷிய அதிபா் விளாதிமீா் புதினுடன் தொலைபேசியில் உரையாடி, அவருடனான உறவைப் புதுப்பித்துக்கொண்டாா்.
உக்ரைன் விவகாரம் தொடா்பாக புதினுடன் நேரடியாகப் பேச்சுவாா்த்தை நடத்தி போரை முடிவுக்குக் கொண்டுவரப்போவதாகவும் டிரம்ப் அறிவித்தாா். அதற்கு முன்னோட்டமாக, சவூதி அரேபியாவில் அமெரிக்கா மற்றும் ரஷிய பிரதிநிதிகள் பிப்ரவரி தொடக்கத்தில் சந்தித்துப் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
இரண்டாம் கட்டமாக இஸ்தான்புல்லில் நடைபெற்ற பேச்சுவாா்த்தையில், அமெரிக்கா-ரஷியா இடையே நேரடி விமானப் போக்குரவத்தை மீண்டும் தொடங்குவது குறித்து தற்போது விவாதிக்கப்பட்டுள்ளது.