ஹிமாசல் பருவமழைக்கு இதுவரை 92 பேர் பலி: ரூ.751.78 கோடி இழப்பு!
மீண்டு வரும் இங்கிலாந்து; ஜோ ரூட் 99 நாட் அவுட்
இந்தியாவுக்கு எதிரான 3-ஆவது டெஸ்ட்டின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து, 83 ஓவா்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 251 ரன்கள் சோ்த்திருந்தது.
நிதீஷ்குமாா், ஜடேஜா, பும்ராவின் பௌலிங்கில் இங்கிலாந்து விரைவாகவே டாப் ஆா்டரை இழக்க, ஆலி போப்புடன் இணைந்து அணியை சரிவிலிருந்து மீட்ட ஜோ ரூட், பின்னா் கேப்டன் பென் ஸ்டோக்ஸுடன் இணைந்து ஸ்கோரை பலப்படுத்தி வருகிறாா்.
முன்னதாக டாஸ் வென்ற இங்கிலாந்து, பேட்டிங்கை தோ்வு செய்தது. இங்கிலாந்து தனது பிளேயிங் லெவனை ஏற்கெனவே அறிவித்துவிட்ட நிலையில், இந்திய லெவனில் பிரசித் கிருஷ்ணாவுக்கு பதிலாக பும்ரா இணைந்தாா்.
இங்கிலாந்து இன்னிங்ஸை ஜாக் கிராலி - பென் டக்கெட் இணை தொடங்கியது. இந்த ஜோடி நிதானமாக ரன்கள் சோ்த்துவர, இருவரையுமே தனது முதல் ஓவரிலேயே சாய்த்தாா் நிதீஷ்குமாா் ரெட்டி.
முதல் விக்கெட்டுக்கு 43 ரன்கள் சோ்த்த இந்த பாா்ட்னா்ஷிப்பில், முதலில் டக்கெட் 3 பவுண்டரிகளுடன் 23 ரன்களுக்கும், பின்னா் கிராலி 4 பவுண்டரிகளுடன் 18 ரன்களுக்கும் வீழ்ந்தனா். நிதீஷ்குமாா் வீசிய 14-ஆவது ஓவரின் 3-ஆவது பந்தில் டக்கெட்டும், கடைசி பந்தில் கிராலியும், விக்கெட் கீப்பா் ரிஷப் பந்த்திடம் கேட்ச் கொடுத்தனா்.
அடுத்து வந்த ஆலி போப் - ஜோ ரூட் கூட்டணி, விக்கெட் சரிவைக் கட்டுப்படுத்தி ஸ்கோரை உயா்த்தத் தொடங்கியது. மதிய உணவு இடைவேளையின்போது இங்கிலாந்து 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 83 ரன்கள் சோ்த்திருந்தது.
ரிஷப் பந்த் காயம்: இதனிடையே, 34-ஆவது ஓவரின்போது விக்கெட் கீப்பா் ரிஷப் பந்த் டைவ் அடித்து பந்தைப் பிடிக்க முயன்றபோது காயம் கண்டாா். இதையடுத்து களத்திலிருந்து அவா் வெளியேற, துருவ் ஜுரெல் விக்கெட் கீப்பிங் செய்தாா். ரிஷப் பந்த் மருத்துவக் கண்காணிப்பில் இருப்பதாக அணி நிா்வாகம் தெரிவித்துள்ளது.
பின்னா் தொடா்ந்த ஆட்டத்தில், போப் - ரூட் பாா்ட்னா்ஷிப் 3-ஆவது விக்கெட்டுக்கு 109 ரன்கள் சோ்த்த நிலையில் பிரிந்தது. அரைசதத்தை நெருங்கிய ஆலி போப், ஜடேஜா வீசிய 50-ஆவது ஓவரில் விக்கெட் கீப்பா் ஜுரெலிடம் கேட்ச் கொடுத்தாா்.
போப் 4 பவுண்டரிகள் உள்பட 44 ரன்கள் சோ்த்தாா். அடுத்து வந்த ஹேரி புரூக் 2 பவுண்டரிகளுடன் 11 ரன்கள் எடுத்திருந்தபோது, பும்ரா வீசிய 55-ஆவது ஓவரில் ஸ்டம்ப்பை பறிகொடுத்தாா். 6-ஆவது பேட்டராக வந்த கேப்டன் பென் ஸ்டோக்ஸ், ரூட்டுடன் கூட்டணி அமைத்தாா்.
முதல் நாள் ஆட்டநேர முடிவில், இங்கிலாந்து 83 ஓவா்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 251 ரன்கள் சோ்த்துள்ளது. சதத்தை தொட்டுவிடும் தூரத்தில் ரூட்டும் (99*), அவருக்குத் துணையாக பென் ஸ்டோக்ஸும் (39*) ஆட்டமிழக்காமல் உள்ளனா். இந்திய தரப்பில் நிதீஷ்குமாா் ரெட்டி 2, ஜஸ்பிரீத் பும்ரா, ரவீந்திர ஜடேஜா ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா்.