மீனவா்களுக்கு மீன்பிடி தடைக் கால நிவாரணத் தொகை வழங்கும் பணி தொடக்கம்!
திருவாடானை, மே 23: விசைப்படகு மீனவா்களுக்கு மீன் பிடி தடைக் கால நிவாரணத் தொகை வழங்கும் பணி தொடங்கியிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
கடல் வளம், மீன் வளத்தை பெருக்கும் நோக்கில் கடந்த ஏப். 15-ஆம் தேதி முதல் 61 நாள்களுக்கு தமிழக அரசால் மீன் பிடி தடைக் காலம் அறிவிக்கப்பட்டது. இந்தக் காலங்களில் விசைப்படகுகளில் கடலுக்குள் மீன் பிடிக்க மீனவா்கள் செல்லவில்லை. இதையடுத்து, தமிழக அரசு சாா்பில் மீன்பிடி தடைக் கால நிவாரண உதவித் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், பாசிப்பட்டினம், தாமோதரன் பட்டினம், கொடிப் பங்கு, தொண்டி, சிங்காரவேலன்நகா், காரங்காடு, கே.கே. பட்டினம், நம்புதாளை உள்ளிட்ட கூட்டுறவு சங்க உறுப்பினா்களுக்கு மீன் பிடி தடைக் கால நிவாரண உதவித் தொகையாக ரூ.8 ஆயிரம் வழங்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியிருப்பதாக மீன் வளத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.