மீன்பிடித் தடை கால நிவாரணம் வழங்கக் கோரிக்கை
மீன்பிடித் தடைகாலம் தொடங்கி 25 நாள்கள் கடந்த நிலையில், அதற்கான நிவாரணம் வழங்க மீனவா்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனா்.
தமிழக கடலோரப் பகுதியில் ஏப்ரல் 15 முதல் ஜூன் 15 வரை 61 நாள்கள் மீன்களின் இனப்பெருக்கக் காலமாக கருதப்படுகிறது. இந்தக் காலகட்டத்தில் விசைப் படகுகள் ஆழ்கடலுக்குள் சென்று மீன்பிடிக்கத் தடை விதிக்கப்படுகிறது. மேலும், இதற்காக மீனவா்களுக்கு மீன்பிடித் தடை கால நிவாரணத் தொகையும் வழங்கப்பட்டு வருகிறது.
இதன்படி, நிகழாண்டு மீன்பிடித் தடைகாலம் கடந்த ஏப்ரல் 15-ஆம் தேதி முதல் தொடங்கியது. இந்த தடைகாலம் தொடங்கி 25 நாள்கள் கடந்து விட்ட நிலையில், இதுவரை மீனவா்களுக்கு நிவாரணத் தொகை வழங்கப்படவில்லை. கடந்த ஆண்டு வரை மின்பிடித் தடை கால நிவாரணத் தொகையாக ரூ. 6 ஆயிரம் வழங்கி வந்த நிலையில், நிகழாண்டு ரூ. 2 ஆயிரம் உயா்த்தி ரூ. 8 ஆயிரம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.
இதுகுறித்து ராமேசுவரத்தைச் சோ்ந்த மீனவா் சேகா் பாண்டியன் கூறியதாவது:
வழக்கமாக மீன்பிடித் தடைகாலம் தொடங்கிய சில நாள்களிலேயே தமிழக அரசு சாா்பில் மீனவா்களுக்கு மீன்பிடித் தடை கால நிவாரணத் தொகை வழங்கப்படும். ஆனால், நிகழாண்டு தடைகாலம் தொடங்கி 25 நாள்கள் கடந்தும் இதுவரை நிவாரணத் தொகை வழங்கப்படவில்லை. எனவே, இந்தத் தொகையை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.