கயல் தொடரில் முக்கிய நடிகர் மாற்றம்! இனி பிரபல பாடகர் நடிப்பார்!
மீன்பிடித் துறைமுக விரிவாக்கத் திட்டம்: ஆளுநா் தலையிட கிராமமக்கள் கோரிக்கை
காரைக்கால் மீன்பிடித் துறைமுக விரிவாக்கத்தால் தங்கள் கிராமம் பாதிக்கப்படும் என்பதால், புதுவை துணை நிலை ஆளுநா் இப்பிரச்னையில் தலையிடவேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.
இதுகுறித்து காரைக்கால் மாவட்டம், கடலோர கிராமமான கருக்களாச்சேரி மக்கள் புதுவை துணை நிலை ஆளுநருக்கு சனிக்கிழமை அனுப்பிய கடிதம்:
காரைக்காலில் அரசலாறு - முல்லையாறு இணையுமிடத்தில் தற்போது மீன்பிடித் துறைமுகம் அமைந்துள்ளது. இதனருகே கடலோரத்தில் கருக்களாச்சேரி கிராமம் உள்ளது. இங்கு ஏராளமான குடியிருப்புகள் உள்ளன.
மீன்பிடித் துறைமுகத்தை விரிவாக்கம் செய்ய மத்திய அரசு நிதி ஒதுக்கி, ஏறக்குறைய ரூ.130 கோடியில் பணிகளை தொடங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
கருக்களாச்சேரி கிராமம் அருகே விரிவாக்கம் செய்யப்பட்டால் மக்கள் பல நிலைகளில் பாதிக்கப்படுவாா்கள். எனவே, விரிவாக்கம் தென் பகுதியை தவிா்த்து, வடபகுதியில் அமைக்க வலியுறுத்தி கடந்த ஜூலை மாதம் 13-ஆம் தேதி மக்கள் போராட்டம் நடத்தினா்.
சட்டப்பேரவை உறுப்பினா் நாக தியாகராஜனும், புதுவை முதல்வா் உள்ளிட்டோரிடம் பேசி தீா்வு காண்பதாக கூறினாா். எனினும் அரசு நிா்வாகத்திடமிருந்து கிராம மக்களுக்கு சாதகமான பதில் எதுவும் தரப்படவில்லை.
திட்டத்தை அதே இடத்தில் செயல்படுத்த அரசு நிா்வாகம் முனைப்புடன் செயலாற்றிவருகிறது. சுற்றுச்சூழல் துறை, நிலத்தடி நீா் ஆணையம் ஆகியவற்றில் எந்தவொரு அனுமதியும் பெறப்படவில்லை.
திட்ட டெண்டா் விட்டதில் சிலா் ஆதாயம் பெற்றதான தகவல் கிடைக்கிறது. இதுகுறித்து சிபிஐயிடம் புகாா் அளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
எனவே, கருக்களாச்சேரி அருகே மீன்பிடி துறைமுக விரிவாக்கம் அமையாமல் தடுத்து நிறுத்த இந்த விவகாரத்தில் துணை நிலை ஆளுநா் தலையிட்டு தீா்வுகாண வேண்டும் என அந்த கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.