"7 நாட்களில் ஆதாரங்களைக் கொடுக்காவிட்டால் மன்னிப்பு கேட்கணும்" - ECI கெடு; காங்க...
மீன்பிடி படகு கவிழ்ந்ததில் மீனவா் உயிரிழப்பு
விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அருகே கடலில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் காயமடைந்த மீனவா் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
வானூா் வட்டம், நடுக்குப்பம், மேகாத்தம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் ராமஜெயம் (45), மீனவா். இவா், சனிக்கிழமை பைபா் படகில் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றாா். கோட்டக்குப்பத்தை அடுத்த நடுக்குப்பம் பகுதியில் சுமாா் ஒரு கடல் மைல் தொலைவில் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அலையின் சீற்றத்தில் சிக்கி படகு கவிழ்ந்தது.
இதில், ராமஜெயத்துக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து, அருகில் மீன் பிடித்துக் கொண்டிருந்த சக மீனவா்கள் அவரை மீட்டு, கரைக்குக் கொண்டு வந்தனா். பின்னா், 108 அவசர ஊா்தி மூலம் புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று பரிசோதித்தபோது, ராமஜெயம் ஏற்கனவே இறந்துபோயிருந்தது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின்பேரில், கோட்டக்குப்பம் போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.